Published : 17 Jan 2023 09:25 AM
Last Updated : 17 Jan 2023 09:25 AM
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்பர்ன் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 40-ம் நிலை வீரரான பிரிட்டனின் ஜாக் டிராப்பரை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை 7-5 என போராடி கைப்பற்றிய நடால் 2-வது செட்டை 2-6 என இழந்தார்.
நெருக்கமாக அமைந்த 3-வது செட்டை நடால் 6-4 என கைப்பற்றினார். 4-வது செட்டில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் அந்த செட்டை 6-1 தன்வசப்படுத்தினார். முடிவில் 3 மணி நேரம் 41 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டத்தில் ரபேல் நடால் 7-5, 2-6, 6-4,6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
3-ம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-3, 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் பிரான்ஸின் குவென்டின் ஹாலிஸை வீழ்த்தினார். 10-ம் நிலை வீரரான போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ், 16-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோ, 18-ம் நிலை வீரரான கரேன் கச்சனோவ், 20-ம் நிலை வீரரான கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் ஆகியோரும் தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-0, 6-1 என்ற நேர் செட்டில் ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனையும் 6-ம் நிலை வீராங்கனையான கிரீஸின் மரியா சக்காரி 6-1, 6-4 என்ற செட் கணக்கில் சீனாவின் 119-ம் நிலை வீராங்கனையான யுவன் யி-யையும் தோற்கடித்து 2-வது சுற்றில் நுழைந்தனர்.
7-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோரி காஃப் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் கேத்ரினா சினியகோவாவையும், 13-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் 7-5, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அனா கலின்ஸ்கயாவையும், 17-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் ஜெலினா ஒஸ்டபென்கோ 6-4, 6-2 என்ற நேர் செட்டில் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவையும் வீழ்த்தினர். 15-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் பெட்ரா விட்டோவா 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் அலிசன் வான் உய்ட்வாங்கை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT