Published : 17 Jan 2023 09:45 AM
Last Updated : 17 Jan 2023 09:45 AM
ரூர்கேலா: ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கியில் மலேசியா, நெதர்லாந்து அணிகள் வெற்றி பெற்றன. ஒடிசாவின் ரூர்கேலாவில் உள்ள பிர்ஸா முண்டா மைதானத்தில் நேற்று ‘சி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள மலேசியா, 23-வது இடத்தில் உள்ள சிலியை எதிர்த்து விளையாடியது. தொடக்கத்தில் சிலி அணி ஆதிக்கம் செலுத்தியது. 20-வது நிமிடத்தில் சிலி அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை அந்த அணியின் வீரர் ஜுவான் அமோரோசோ கோலாக மாற்றினார். இதனால் சிலி அணி 1-0 என முன்னிலை பெற்றது.
26-வது நிமிடத்தில் மலேசிய வீரர் ஷஹரில் சாபா இலக்கை நோக்கி அடித்த பந்தை, சிலி வீரர் ஆண்ட்ரெஸ் பிசாரோ காலால் தடுத்தார். இதனால் மலேசியா அணிக்கு பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கிடைத்தது. இதை ரஸி ரஹீம் கோலாக மாற்ற ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது. இருப்பினும் அடுத்த 3-வது நிமிடத்தில் சிலி அணி தனது 2-வது கோலை அடித்தது. மார்ட்டின் ரோட்ரிக்ஸ் அடித்த ரிவர்ஸ் ஷாட்டால் பந்து கோல் வலைக்குள் பாய்ந்தது. இதனால் முதல் பாதியில் சிலி அணி 2-1 என முன்னிலை வகித்தது.
சிலி அணியைவிட தரவரிசையில் 12 இடங்களில் முன்னிலை வகிக்கும் மலேசியா 2-வது பாதியில் விரைவாக செயல்பட்டது. 41-வது நிமிடத்தில் வலதுபுறத்தில் இருந்து கிடைத்த பாஸை கோல்வலைக்குள் திணித்து அசத்தினார்அஷ்ரன் ஹம்சனி. இதனால் ஆட்டம் 2-2 என சமநிலையை அடைந்தது. அடுத்த நிமிடத்திலேயே மேலும் ஒரு கோலை அடித்து மலேசிய அணி முன்னிலை பெற்றது.
42-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சுமந்திரி நோர்ஸ்யாபிக் கோலாக மாற்றினார். இதனால் மலேசியா 3-2 எனமுன்னிலை பெற்றது. சிலி அணியால் கடைசி வரை முயன்றும் மலேசிய அணியின் தடுப்பு அரண்களை கடந்து மேற்கொண்டு கோல்அடிக்க முடியாமல் போனது. முடிவில் மலேசியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அந்த அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. 2 ஆட்டங்களில் விளையாடி உள்ள மலேசியா 3 புள்ளிகளுடன் ‘சி’ பிரிவில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் தோல்வி கண்டிருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் கால் இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
நெதர்லாந்து அசத்தல்
‘சி’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து - நியூஸிலாந்து அணிகள் மோதின. இதில் நெதர்லாந்து 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் கேப்டன் பிரிங்மான் தியரி இரு கோல்களையும் (3 மற்றும் 13-வது நிமிடம்), பிஜென் கோயன் (20-வது நிமிடம்), கோட்மேக்கர்ஸ் டெப் (55-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.
உலகத் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் நெதர்லாந்து அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் மலேசியாவை 4-0 என்றகோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது.நெதர்லாந்து தனது பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அதேவேளையில் நியூஸிலாந்து அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது.
இன்றைய ஆட்டம்கொரியா – ஜப்பான்: நேரம்: மாலை 5 மணி
ஜெர்மனி – பெல்ஜியம்: நேரம்: இரவு 7 மணி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT