

ரூர்கேலா: நடப்பு ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் சுற்றுப் போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை.
குரூப்-டி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, இங்கிலாந்து உடன் பலப்பரீட்சை மேற்கொண்டது. இந்த போட்டி ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணிக்கு உள்நாட்டு ரசிகர்களின் ஆதரவு மைதானத்தில் அமோகமாக இருந்தது.
ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் கோல் பதிவு செய்ய முயற்சி செய்தன. ஆனால் அந்த முயற்சியில் இரு அணிகளும் இறுதி வரை வெற்றி பெறவில்லை. இந்தப் போட்டியில் இரு அணிகளுக்கும் கோல் பதிவு செய்யும் வாய்ப்பு அதிகம் இருந்தது. அதே நேரத்தில் இரு அணிகளின் தடுப்பாட்டமும் அபாரமாக இருந்த காரணத்தால் அது கோலாக மாறவில்லை. இரு அணிகளுக்கும் பெனால்டி வாய்ப்புகளும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
குரூப்-டி பிரிவில் கோல்கள் அடிப்படையில் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. இந்தியா இப்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. குரூப் சுற்றில் முதலிடம் பிடிக்கவும், காலிறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறவும் வரும் 19-ம் தேதி வேல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டி உள்ளது.