சுப்மன் கில்; விராட் கோலி ருத்ரதாண்டவம் - இலங்கைக்கு 391 ரன்கள் இலக்கு 

சுப்மன் கில்; விராட் கோலி ருத்ரதாண்டவம் - இலங்கைக்கு 391 ரன்கள் இலக்கு 
Updated on
1 min read

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 390 ரன்களை சேர்த்துள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா - சுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தது. இருவரும் இணைந்து நிதான ஆட்டத்துடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 15 ஓவர்களில் 91 ரன்களை சேர்த்த இந்த இணையை சாமிக்க கருணாரத்னே பிரித்தார். 42 ரன்களில் அவுட்டாகி ரோஹித் ஷர்மா வெளியேறினார். இதையடுத்து களத்துக்கு வந்த விராட் கோலி, சுப்மன் கில்லுடன் கைகோத்து அணிக்கு பலம் சேர்த்தார்.

இருவரும் இணைந்து இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாப்புறமும் விரட்டியடிக்க சுப்மன் கில் 97 பந்துகளில் 116 ரன்களில் வெளியேறினார். அவருக்கு அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 38 ரன்களிலும், கே.எல்.ராகுல் 7 ரன்களிலும் விக்கெட்டாகினர். சூர்யகுமார் யாவத் 4 ரன்களில் கிளம்பினார். மற்றொருபுறம் விராட் கோலி நிலைத்து நின்று ஆடி 110 பந்துகளில் 166 ரன்களை சேர்த்தார். 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 390 ரன்களை சேர்த்தது. விராட்கோலியும், அக்சர்படேலும் பேட்ஸ்மேன்களாக களத்தில் இருந்தனர்.

இலங்கை அணி தரப்பில் லஹீரு குமாரா, காசுன் ரஜிதா தலா 2 விக்கெட்டுகளையும், சாமிக்க கருணாரத்னே 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in