

திருவனந்தபுரம்: இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றுவதில் இந்திய அணி தீவிர முனைப்புடன் செயல்படக்கூடும்.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள்கிரிக்கெட் போட்டித் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்ற முதல்ஆட்டத்தில் 67 ரன்கள் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் தொடரை இந்தியா 2-0 என தன்வசப்படுத்தியது. இந்நிலையில் கடைசி ஆட்டத்தில் இரு அணிகளும் இன்றுதிருவனந்தபுரத்தில் மோதுகின்றன.
இந்திய அணி தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பிலும், இலங்கை அணி ஆறுதல் வெற்றிபெற வேண்டும் என நினைப்பிலும் களம் காணக்கூடும். இந்திய அணியில் பணிச்சுமையை கருத்தில் கொண்டு பேட்டிங்கில் பெரியஅளவில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இல்லை என கருதப்படுகிறது. 17-ம் தேதி வலுவான நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில்இந்தியா விளையாட உள்ளதால் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் களமிறக்கப்படுவது சந்தேகம்தான்.
பந்து வீச்சில் ஒரு சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரானடெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு மொகமது ஷமிக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்படக்கூடும். அவருக்கு பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் களமிறக்கப்படலாம். இதேபோன்று அக்சர் படேலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரை பயன்படுத்துவது குறித்தும் அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும். 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்த குல்தீப் யாதவ் மீண்டும் ஒரு முறை இலங்கை பேட்டிங் வரிசைக்கு நெருக்கடிதரக்கூடும்.
நேரம்: பிற்பகல் 1.30 மணி
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்