Published : 15 Jan 2023 06:50 AM
Last Updated : 15 Jan 2023 06:50 AM

ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி - நெதர்லாந்து, நியூஸிலாந்து அணிகள் வெற்றி

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடைபெற்று வரும் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கியில் மலேசியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்த மகிழ்ச்சியில் நெதர்லாந்து அணி வீரர்கள்.

ரூர்கேலா: சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ‘சி’ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் நெதர்லாந்து, நியூஸிலாந்து அணிகள் வெற்றி பெற்றன.

ரூர்கேலாவில் உள்ள பிர்ஸா முண்டா மைதானத்தில் பிற்பகல் 1 மணி அளவில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூஸிலாந்து – சிலி அணிகள் மோதின. இதில் நியூஸிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 9-வது நிமிடத்தில் நியூஸிலாந்து வீரர் சேம் லேன் பீல்டு கோல்அடித்தார். தொடர்ந்து 11-வது மற்றும் 18-வது நிமிடத்தில் சாம் ஹிஹா,பீல்டு கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் நியூஸிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

49-வது நிமிடத்தில் சிலி வீரர் இக்னாசியோ கான்டார்டோ, பீல்டுகோல் அடித்தார். ஆனால் அதற்குமேல் அந்த அணியால் நியூஸிலாந்து அணியின் தடுப்பு அரண்களை கடந்து மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் நியூஸிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

‘சி’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து – மலேசியா அணிகள் மோதின. இதில் 3 முறை சாம்பியனான நெதர்லாந்து அணியானது 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் 19-வது நிமிடத்தில் திஜ் வான் டேம், 23-வது நிமிடத்தில் ஜிப் ஜான்சன், 46-வது நிமிடத்தில் டியூன் பீன்ஸ் ஆகியோர் கோல் அடித்தனர்.

நியூஸிலாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகள் தலா 3 புள்ளிகளை பெற்ற போதிலும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் நெதர்லாந்து அணி தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. ‘சி’ பிரிவில் நாளை (16-ம் தேதி) நடைபெறும் ஆட்டத்தில் நியூஸிலாந்து – நெதர்லாந்து அணிகள் நேருக்கு நேர் சந்திக்கின்றன. மற்றொரு ஆட்டத்தில் மலேசியா – சிலி அணிகள் மோதுகின்றன.

இன்றைய ஆட்டம்ஸ்பெயின் – வேல்ஸ்

நேரம்: மாலை 5 மணி

இந்தியா – இங்கிலாந்து

நேரம்: இரவு 7 மணி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x