

லண்டன்: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளின்போது நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு லலித் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேறிய அவர், லண்டனில் தஞ்சம்புகுந்தார். அந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அவரை நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் 1994-இல் பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) பட்டத்தை வென்ற நடிகை சுஷ்மிதா சென் உடன் லலித் மோடி டேட்டிங் செய்துவருவதாக செய்திகள் வெளியாகின. இருவரும் வெளிநாடுகளில் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை லலித் மோடியே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இது வைரலாகி பேசுபொருளாக மாறியதுடன் லலித் மோடி குறித்து விமர்சனங்கள் அதிகமாகின.
இதனிடையே, திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள லலித் மோடிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மெக்சிகோவில் வசித்துவந்த அவருக்கு இரண்டு வாரங்களில் இரண்டு முறை கரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். ஏர் ஆம்புலன்ஸ் மூலம் லண்டனுக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ள அவருக்கு இன்ஃப்ளூயன்ஸா மற்றும் நிமோனியா பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது ஆக்சிஜன் ஆதரவுடன் சிகிச்சை பெற்றுவருகிறார். 24 மணிநேரமும் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றுவருகிறார். பாலிவுட் நட்சத்திரம் சுஷ்மிதா சென்னின் சகோதரர் ராஜீவ் உட்பட பலர் லலித் மோடி குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.