Published : 14 Jan 2023 06:48 AM
Last Updated : 14 Jan 2023 06:48 AM

மகளிருக்கான யு 19 உலகக் கோப்பை கிரிக்கெட் - தென் ஆப்பிரிக்காவில்இன்று தொடக்கம்

பெனோனி: மகளிருக்கான யு 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முதன்முறையாக இந்த தொடரை நடத்துவதால் இளம் வீராங்கனைகள் உலக அரங்கில் பிரகாசிக்க சிறந்த வாய்ப்பு உருவாகி உள்ளது.

ஆடவருக்கான யு 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை ஐசிசி கடந்த 1988-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இதுவரை 14 தொடர்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் மகளிருக்கான யு 19 உலகக் கோப்பை தொடர் நடத்தப்படுவது இதுவே முன்முறையாகும். கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் கிரிக்கெட் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும் வகையிலும், இளம் வீராங்கனைகளின் திறமைகளை கண்டறிவதற்காகவும் யு 19 உலகக் கோப்பை தொடரை ஐசிசி முன்னெடுத்துள்ளது.

இந்தத் தொடர் 2021-ம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா தொற்று காரணமாக தற்போது நடைபெறுகிறது.

டி 20 வடிவிலான இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. 16 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் மொத்தம் 41 ஆட்டங்கள் பெனோனி, போட்செஃப்ஸ்ட்ரூம் உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெறுகிறது.

ஐசிசி-யின் முழுநேர அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே ஆகிய 11 அணிகள் யு 19 உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றன.

இந்த அணிகளுடன் ஐசிசியின் 5 பிராந்தியங்களில் இருந்து தலா ஒரு அணி என அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ருவாண்டா, ஸ்காட்லாந்து, இந்தோனேஷியா அணிகளும் கலந்து கொள்கின்றன.

ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் போட்டியை நடத்தும் தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் உள்ளன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இன்று மாலை 5.15 மணிக்கு தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இதே நேரத்தில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இலங்கை – அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

முன்னதாக பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – வங்கதேசம், ஸ்காட்லாந்து – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோத உள்ளன. ஷபாலி வர்மாவுடன் சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள ரிச்சா கோஷும் இந்திய அணியில் இடம் பெற்றிருப்பது பலமாக கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x