Published : 14 Jan 2023 06:43 AM
Last Updated : 14 Jan 2023 06:43 AM

ஆஸி. கோல் மழை… வேல்ஸ் தோல்வி… - ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி முதல்நாள் சுவாரஸ்யங்கள்

புவனேஷ்வர்: ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசாவில் நேற்று தொடங்கியது. 16 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியுடன் மோதியது. ரூர்கேலாவில் ரூ.200 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிர்ஸா முண்டா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

இதை அமித் ரோஹிதாஸ் கோலாக மாற்ற இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. 26-வது நிமிடத்தில் இந்திய அணி 2-வது கோலை அடித்தது. ஹர்திக், இடதுபுறம் அபாரமாக பந்தை கடத்திச் சென்று கோல் வலைக்குள் திணித்தார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

32-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஷ்தீப், ஸ்பெயினின் ‘டி’ வளையத்துக்குள் ஃபவுல் செய்யப்பட்டார். இதனால் இந்திய அணிக்கு பெனால்டி ஸ்டிரோக் வழங்கப்பட்டது. இதில் ஹர்மான்பிரீத் இடது புறம் நோக்கி அடித்த ஷாட்டை, பந்து கோல் லைனை தொடுவதற்கு முன்னதாக ஸ்பெயின் கோல் கீப்பர் ராபி தடுத்தார். இதை எதிர்த்து இந்திய அணி மேல்முறையீடு செய்தது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

37-வது நிமிடத்தில் கிடைத்தபெனால்டி கார்னர் வாய்ப்பை மன்பிரீத்தும், 43-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மான்பிரீத்தும் வீணடித்தனர். 48-வது நிமிடத்தில் இந்திய வீரர் அபிஷேக் விதிமுறை மீறி செயல்பட்டதால் 10 நிமிடங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்திய அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. எனினும் இந்த நேரத்தில் டிபன்ஸில் இந்திய அணி துடிப்புடன் செயல்பட்டது.

52-வது நிமிடத்தில் கோல் ஸ்பெயின் அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு இந்திய அணியின் கோல்கீப்பர் கிருஷ்ணன் பதக் முட்டுக்கட்டை போட்டார். 58-வது நிமிடத்தில் அபிஷேக் மீண்டும் களத்திற்கு திரும்பினார். எஞ்சிய 2 நிமிடங்களிலும் இந்திய அணியின் தடுப்பு அரணை மீறி ஸ்பெயின் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அர்ஜெண்டினா வெற்றி: புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றஅர்ஜெண்டினா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

உலக தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா அணி முதல் 15 நிமிடங்களில் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறியது. அடுத்த 15 நிமிடங்களில் அர்ஜெண்டினா வலுவாக மீண்டு வந்தது. ஆனால் கிடைத்த 3 பெனால்டி கார்னர்களையும் அந்த அணியால் கோல்களாக மாற்ற முடியவில்லை.

2-வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடிக்க கிடைத்த அருமையான வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா நழுவவிட்டது. அதேவேளையில் 42-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா தாக்குதல் ஆட்டம் தொடுத்தது. டோஸ்கானியிடம் இருந்து பாஸை பெற்ற கேசெல்லா மைகோ அற்புதமாக பீல்டு கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா 1-0 என முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் தென் ஆப்பிரிக்கா தாக்குதல் ஆட்டம்மேற்கொண்டது. ஆனால் அர்ஜெண்டினா அணி டிபன்ஸில் வலுவாக செயல்பட்டதால் தென் ஆப்பிரிக்க அணியால் பதிலடி கொடுக்க முடியாமல் போனது. முடிவில் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அர்ஜெண்டினா தனது அடுத்தஆட்டத்தில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுடன் 16-ம் தேதி மோதுகிறது. இதே நாளில் தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஆஸி. கோல் மழை….: கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை பந்தாடியது. டாம் கிரெய்க் 8, 31 மற்றும் 44-வது நிமிடங்களில் பீல்டு கோல் அடித்து அசத்தினார். அதேவேளை யில் ஜெர்மி ஹேவர்ட் 12 நிடங்கள் இடைவெளியில் 3 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோல்களாக மாற்றினார். இந்த 3 கோல்களையும் அவர் 26, 28 மற்றும் 38-வது நிமிடங்களில் அடித்தார். ஓகில்வி 27-வது நிமிடத்திலும், விக்காம் 54-வது நிமிடத்திலும் பீல்டு கோல் அடித்து அசத்தினர்.

வேல்ஸ் தோல்வி…: பிர்ஸா முண்டா மைதானத்தில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து – வேல்ஸ் அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அன்செல் இரு கோல்களையும் பார்க், ராபர், பாண்டுராக் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.

இன்றைய ஆட்டம் நியூஸிலாந்து – சிலி

நேரம்: பிற்பகல் 1 மணி நெதர்லாந்து – மலேசியா

நேரம்: பிற்பகல் 3 மணி பெல்ஜியம் – கொரியா

நேரம்: மாலை 5 மணி ஜெர்மனி – ஜப்பான்

நேரம்: இரவு 7 மணி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x