Published : 13 Jan 2023 05:53 PM
Last Updated : 13 Jan 2023 05:53 PM

கடைசியாக ஒருமுறை சக வீரர்களுடன் டீம் பஸ்ஸில் செல்வதை இழக்க விரும்பவில்லை: ஓய்வுக்கு முன் தோனி உருக்கம்

தோனி | கோப்புப்படம்

இங்கிலாந்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய கிரிக்கெட்டுக்கும், ரசிகர்களுக்கும் பேரிழப்பையும், அதிர்ச்சியையும் கொடுத்த தொடர். ஆம், நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியுடன் தோனி தான் ஓய்வு பெறப்போவதை சூசகமாக ரிஷப் பந்த் இடம் தெரிவித்தது அன்றைய தினம் தான்.

ஜூலை மாதத்தில் நடந்த அந்தப் போட்டியில் நியூஸிலாந்தை இந்திய அணி 239 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியது. புவனேஷ்வர் குமார் 10 ஓவர்கள் வீசி 43 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பும்ரா, ஜடேஜா சிக்கனமாக வீச, சஹல் 10 ஓவர்களில் 63 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 10 ஓவர்களில் 55 ரன்களையும் கொடுத்து கொஞ்சம் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர்.

இலக்கை விரட்டும் போது இந்திய அணி படுமோசமாக தொடங்கியது. ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி என மூவரும் வெறும் 1 ரன் எடுத்து மேட் ஹென்றி மற்றும் ட்ரெண்ட் போல்ட்டிடம் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். தினேஷ் கார்த்திக், 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பிறகு ரிஷப் பந்த் (32 ரன்கள்), ஹர்திக் பாண்டியா (32 ரன்கள்) சேர்ந்து கொஞ்சம் ஸ்திரப்படுத்தி ஸ்கோரை 71 ரன்களுக்கு உயர்த்திய போது இருவரையும் சாண்ட்னர் காலி செய்தார். இருவருமே படுமோசமாக ‘அக்ராஸ் தி லைனில்’ பந்தை ஸ்லாக் செய்து கேட்ச் ஆகி வெளியேறினர்.

இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 92 ரன்கள் என்ற நிலையில் ஆல்டைம் பினிஷர் தோனி மற்றும் ஜடேஜா ஆகியோரின் பொறுப்புக்கு வந்தது.

ஜடேஜா எதிர்த்தாக்குதல் இன்னிங்சை ஆட, தோனி அவருக்கு உறுதுணையாக அருமையாக சிங்கிள், இரண்டு என்று எடுத்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஆடினார். இருவரும் இணைந்து 116 ரன்களை 17 ஓவர்களில் விளாசினர். ஜடேஜா 59 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 77 ரன்கள் எடுத்து போல்ட்டின் ஸ்லோ பந்தை வான் நோக்கி ஆடி கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆட்டம் தோனி கையில் மட்டுமே தற்போது இருந்தது. ஆனால், அடுத்த ஓவரிலேயே 50 ரன்கள் எடுத்த தோனி, பந்தை ஸ்கொயர் திசைக்கு அடித்து விட்டு 2வது ரன்னுக்காக படுவேகமாக ஓடி வந்தார். ஆனால் அங்குதான் மார்டின் கப்டில் மிக அருமையாக ஒரு த்ரோவை நேராக ஸ்டம்பில் அடிக்க தோனி ஸ்ட்ரெச் செய்து பார்த்தார். ஆனாலும் ஒரு இன்ச்சில் வெளியே இருக்க ஆட்டமிழந்தார். 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்களில் அப்போது இந்தியா இருந்தது. 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பரிதாபமாகத் தோற்றது. தோற்றதோடு மட்டுமல்லாமல் தோனியின் கடைசி ஒருநாள் போட்டி அதுதான் என்ற அறிவிப்பும் ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது.

தோனி தன் அறிமுக ஒருநாள் போட்டியிலும் ரன் அவுட், தன் கடைசி ஒருநாள் போட்டியிலும் ரன் அவுட். இந்தப் போட்டியுடன் தோனி ஓய்வு பெறும் முடிவை போட்டிக்கு முன்னதாக எடுத்ததாக இந்தியாவின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தன்னுடய “Coaching Beyond: My Days with the Indian Cricket Team” என்ற புத்தகத்தில் தோனி தன் ஓய்வு முடிவை ரிஷப் பந்த் இடம் சூசகமாக கூறிய போது தான் கேட்டதாக எழுதியுள்ளார்.

“நான் எனக்கான காபியை ஆற்றிக் கொண்டிருந்தேன். அப்போது தோனியும் ரிஷப் பந்த்தும் உள்ளே வந்து டேபிளில் என்னுடன் இணைந்தார்கள். நியூஸிலாந்து இன்னிங்ஸ் முடிய இன்னும் 2 ஓவர்கள்தான் பாக்கி இருந்தது. அதன் பிறகு நாம் இலக்கை விரட்ட வேண்டும். ஆகவே போட்டி முன்னதாகவே முடிந்து விடும் என்று தெரிந்தது. அப்போது ரிஷப் பந்த், தோனியிடம் ஹிந்தியில் “சில வீரர்கள் லண்டனுக்கு தனியாக இன்றே செல்ல முடிவெடுத்துள்ளனர். நீங்களும் இணைய ஆர்வமாக இருக்கிறீர்களா?” என்று கேட்க அதற்குத் தோனி, “இல்லை ரிஷப் பந்த், நான் வரவில்லை. கடைசியாக ஒருமுறை சக வீரர்களுடன் டீம் பஸ்ஸில் செல்லும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை” என்றார்.

தனக்கு தோனி இவ்வாறு கூறி ஓய்வு பெறுவதை சூசகமாக தெரிவித்தது தெரிந்தாலும் தான் யாரிடமும் இதைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்று அந்த நூலில் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x