இந்திய ஹாக்கி அணியும்.. உலகக் கோப்பையும்..

இந்திய ஹாக்கி அணியும்.. உலகக் கோப்பையும்..
Updated on
1 min read

ஒலிம்பிக்கில் 8 தங்கம் வேட்டையாடிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி உலகக் கோப்பை தொடரில் பெரும்பாலும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தது இல்லை. முதல் உலகக் கோப்பை நடைபெற்ற 1971-ல் இந்திய அணி அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது.

2-வது உலகக் கோப்பையில் அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது இந்திய அணி. இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த போதிலும் இந்திய அணியால் வெற்றி பெற முடியாமல் போனது.

1975-ம் ஆண்டு தொடரில் அஜித் பால் சிங் தலைமையில் களமிறங்கிய இந்திய அணியானது மேற்கு ஜெர்மனி, இங்கிலாந்து, கானா அணிகளை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிரா செய்த நிலையில் அர்ஜெண்டினாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்தது.

அரை இறுதியில் மலேசியாவை 3-2 என வென்ற இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்தித்தது. 17-வது நிமிடத்திலேயே பாகிஸ்தான் முதல் கோலை அடித்து அழுத்தம் கொடுத்தது. ஆனால் 2-வது பாதியில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி சுர்ஜித் சிங் கோல் அடிக்க ஆட்டம் 1-1 சமநிலையை அடைந்தது. இருப்பினும், 51-வது நிமிடத்தில் ஜாம்பவான் தயான் சந்த்தின் மகன் அசோக் குமார் அடித்த கோல்தான் இந்திய அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது.

இந்த கோலின் சட்டபூர்வமான தன்மை குறித்து பாகிஸ்தான் அணி கேள்வி எழுப்பிய நிலையில், நடுவர் ஜி.விஜயநாதன் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் இந்தியா முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் அதன் பின்னர் இதுவரை இந்திய அணியால் பதக்க மேடையை நெருங்க முடியவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in