Published : 13 Jan 2023 06:02 AM
Last Updated : 13 Jan 2023 06:02 AM

உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் சுவாரஸ்யங்கள்…

2010ல் மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பங்கேற்ற பாகிஸ்தான் ஹாக்கி அணி

> 1971-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 14 தொடர்களில் 605 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது.

> உலகக் கோப்பை ஹாக்கி தொடர்களில் 605 போட்டிகளில் ஒரு ஆட்டத்துக்கு சராசரியாக 4 கோல்கள் வீதம் 2,433 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.

> இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து உலகக் கோப்பைகளிலும் 26 நாடுகள் பங்கேற்றுள்ளன. சிலி மற்றும் வேல்ஸ் அணிகள் தற்போதையை பதிப்பில் அறிமுகமாகின்றன.

> இந்தியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய 3 அணிகள் மட்டுமே அனைத்து உலகக் கோப்பை தொடர்களிலும் விளையாடி உள்ளன. இந்த 3 அணிகளும் தற்போது 15-வது முறையாக உலகக் கோப்பையில் களமிறங்குகின்றன. இந்த அணிகளுக்கு அடுத்தபடியாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் 13 முறை உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ளன. இதில் பாகிஸ்தானை தவிர மற்ற 3 அணிகளும் தற்போதைய தொடரில் விளையாடுகின்றன.

> ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா தொடர்ச்சியாக 2-வது முறையாக நடத்துகிறது. இதன் மூலம் அடுத்தடுத்து இரு தொடர்களை நடத்திய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரானது புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடத்தப்பட்டது.

> உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளை தொடர்ச்சியாக 2-வது முறையாக நடத்தும் முதல் மைதானம் என்ற பெருமையை புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானம் பெற்றுள்ளது. ரூர்கேலாவில் புதிதாக கட்டப்பட்டு உள்ள பிர்சா முண்டா மைதானத்திலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

> உலகக் கோப்பை தொடருக்காக ரூர்கேலாவில் புதிதாக பிர்சா முண்டா மைதானம் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்தின் இருக்கை 21 ஆயிரம் ஆகும். இதன் மூலம் உலகில் உள்ள பெரிய ஹாக்கி மைதானம் என்ற பெருமை பிர்சா முண்டா மைதானத்துக்கு கிடைத்துள்ளது.

> 16 அணிகள் கலந்து கொள்ளும் தொடரில் 44 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் இரு அரை இறுதி ஆட்டம், இறுதிப் போட்டி என 24 ஆட்டங்கள் கலிங்கா மைதானத்திலும், 20 ஆட்டங்கள் பிர்சா முண்டா மைதானத்திலும் நடைபெறுகின்றன.

> லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும். இந்த வகையில் 4 அணிகள் கால் இறுதிக்குள் நேரடியாக நுழையும். லீக் சுற்றில் 2-வது இடம் மற்றும் 3-வது இடம் பிடிக்கும் 8 அணிகள் கிராஸ்-ஓவர் சுற்றில் பலப்பரீட்சை நடத்தும். இதில் இருந்து 4 அணிகள் கால் இறுதி சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

> நடப்பு சாம்பியனாக பெல்ஜியம் அணி திகழ்கிறது. அந்த அணி 2018-ம் ஆண்டு தொடரின் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியிருந்தது.

> உலகக் கோப்பை தொடரில் அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி 4 முறை (1994, 1981, 1978, 1971) பட்டம் வென்றுள்ளது. இதுதவிர அந்த அணி 2 வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளது.

> பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா (1998, 1990, 1973) மற்றும் நெதர்லாந்து (2014, 2010, 1986) அணிகள் தலா 3 முறை வாகை சூடி உள்ளன. மேலும் ஜெர்மனி இரு முறை கோப்பையை வென்றுள்ளது.

> உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியா அதிக பதக்கங்களை வென்றுள்ளது. அந்த அணி 3 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்கள் கைப்பற்றி உள்ளது.

> ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக நெதர்லாந்து 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கம் பெற்றுள்ளது.

> உலகக் கோப்பையில் அதிக ஆட்டங்களில் பங்கேற்ற சாதனை நெதர்லாந்து அணி வசம் உள்ளது. அந்த அணி 100 ஆட்டங்களில் விளையாடி 61-ல் வெற்றி கண்டுள்ளது.

> உலகக் கோப்பையில் அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. அந்த அணி 92 ஆட்டங் களில் விளையாடி 69 வெற்றிகளை குவித்துள்ளது. வெற்றி சராசரி விகிதம் 75 ஆகும்.

> உலகக் கோப்பையில் அதிக கோல்களை அடித்துள்ள அணி ஆஸ்திரேலியா ஆகும். அந்த அணி 305 கோல்களை அடித்துள்ளது. நெதர்லாந்து (267), பாகிஸ்தான் (235) ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா 95 ஆட்டங்களில் பங்கேற்று 40-ல் வெற்றி கண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x