ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இறுதிப்போட்டி: கேரளா - கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இறுதிப்போட்டி: கேரளா - கொல்கத்தா இன்று பலப்பரீட்சை
Updated on
1 min read

ஐஎஸ்எல் 3-வது சீசன் இறுதிப் போட்டியில் அத்லெடிகோ டி கொல்கத்தா - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7 மணிக்கு கொச்சியில் நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

சொந்த ஊர் சாதகத்துடன் கேரளா களமிறங்குகிறது. அதுமட்டு மின்றி உள்ளூரில் தொடர்ந்து 5 போட்டிகளில் வென்றுள்ளதால், அதே உத்வேகத்தோடு கொல்கத் தாவை வீழ்த்தி முதல் சீசன் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பழிதீர்க்கும் முனைப்புடன் கேரளா அணி செயல்படக்கூடும்.

2014-ல் ஐஎஸ்எல் முதல் சீசன் இறுதிப் போட்டியில் கேரளா - கொல்கத்தா அணிகள் மோதின. கடைசி கட்டத்தில் கொல்கத்தா அணி அடித்த ஒரு கோலால் கேரள அணி தோல்வியை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி போட்டி குறித்து கேரள அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் காபெல் கூறும்போது, “முதல் சீசன் இறுதி போட்டி முடிவடைந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்தப் போட்டியில் விளையாடிய வீரர்கள் ஒரு சிலரே அணியில் தற்போது உள்ளனர். அதேசமயம் அந்தப் போட்டியில் வெற்றிக்கான கோலை அடித்த வீரரான முகமது ரபிக் தற்போது எங்கள் அணியில்தான் உள்ளார்.

அது வேறு விதமான போட்டி. பழிவாங்கும் உணர்வோடு விளை யாடினால் எங்களால் சிறப்பாக செயல்பட முடியாது. வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணமும், அணியின் ஒருமைப்பாடுமே வெற்றிக்கு வழிவகுக்கும்’’ என்றார்.

கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு முறை கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. கொல்கத்தா அணி மூன்று சீசன்களிலுமே பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இம்முறை கோப்பை வென்றால் அது அவர்களின் மகுடத்துக்கு மேலும் ஒரு முத்தைச் சேர்க்கும்.

இந்த இறுதிப்போட்டியானது இரு அணிகளின் இணை உரிமையாளர்களுமான சச்சின் மற்றும் கங்குலி ஆகியோருக்கான போட்டியாகவும் பார்க்கப்படுகிறது. 2014-ல் கங்குலி இணை உரிமையாளராக உள்ள கொல்கத்தா சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இம்முறை சச்சின் அணிக்கு கோப்பை கைகூடுமாக என்பது இன்று இரவு தெரியவரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in