

குவாஹாட்டி: இலங்கைக்கு எதிராக குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 113 ரன்கள் விளாசி அசத்தினார். சர்வதேச ஒருநாள் போட்டியில் இது அவரது 45-வது சதமாக அமைந்தது. அதேவேளையில் சொந்த மண்ணில் விராட் கோலி அடித்துள்ள 20-வது சதமாகவும் இது அமைந்தது. இந்த வகையில் இதற்கு முன்னர் சொந்த மண்ணில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 20 சதங்கள் விளாசியிருந்தார். தற்போது விராட் கோலி அந்த சாதனையை டெண்டுல்கருடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
விராட் கோலி இந்த மைல் கல்லை 99 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 160 இன்னிங்ஸ்களில் 20 சதங்களை அடித்திருந்தார். உலக கிரிக்கெட் அரங்கில் இவர்களுக்கு அடுத்த இடங்களில் தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் தலா 14 சதங்களை சொந்த மண்ணில் அடித்திருந்தனர்.
சச்சினின் மற்றொரு சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிராக இந்திய வீரர்களில் சச்சின் மட்டுமே அதிகபட்சமாக 8 சதங்கள் விளாசியிருந்தார். இந்த சாதனையை தற்போது விராட் கோலி முறியடித்துள்ளார். குவாஹாட்டியில் விராட் கோலி நேற்று விளாசிய சதம் இலங்கைக்கு எதிராக அடிக்கப்பட்ட 9-வது சதமாகும்.
தற்போது விளையாடி வரும் வீரர்களில் விராட் கோலி ‘சதங்களின் அரசன்’ ஆக உருவெடுத்துள்ளார். டெஸ்ட் (27 சதங்கள்), ஒருநாள் கிரிக்கெட் போட்டி (45 சதங்கள்), டி 20 கிரிக்கெட் (ஒரு சதம்) என அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் இதுவரை விராட் கோலி 73 சதங்களை வேட்டையாடி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 45 சதங்களும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 44 சதங்களும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 42 சதங்களும், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 41 சதங்களும் விளாசி உள்ளனர்.
சதம் அடித்தது குறித்து விராட்கோலி கூறும்போது, “சிறிய ஓய்வு மற்றும் இரு பயிற்சி செஷன்களுக்கு பிறகு இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினேன். தொடக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதால் நான் எனது இயல்பான ஆட்டத்தை மேற்கொண்டதுடன் ஸ்டிரைக் ரேட்டையும் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது. இரு கேட்ச்கள் தவறவிடப்பட்டதை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். அதிர்ஷ்டம் பெரிய பங்கை வகிக்கிறது. இதற்கு கடவுளுக்கு நன்றி கூற வேண்டும்” என்றார்.