Published : 11 Jan 2023 07:53 AM
Last Updated : 11 Jan 2023 07:53 AM

IND vs SL முதல் ஒருநாள் போட்டி | அதிகமான 300+ ரன்கள்; 27-வது முறை ரோஹித் சர்மா செய்த சாதனை

மொகமது சிராஜ் பந்தில் போல்டான இலங்கை அணியின் பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ். படம்: பிடிஐ

குவாஹாட்டி: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.

குவாஹாட்டியில் உள்ள பார்சபரா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 373 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஜோடி அதிரடியாக விளையாடி சிறந்த அடித்தளம் அமைத்து கொடுத்தது. 5-வது அரை சதத்தைவிளாசிய ஷுப்மன் கில் 60 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்த நிலையில் தசன் ஷனகா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஷுப்மன் கில் 19.4 ஓவர்களில் 143 ரன்கள் சேர்த்தார். 47-வது அரைசதத்தை கடந்த ரோஹித் சர்மா 67 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்த நிலையில் மதுசங்கா பந்தில் போல்டானார். ரோஹித் சர்மா ரஜிதா பந்து வீச்சில் 2 சிக்ஸர்களையும், துனித் வெல்லலகே பந்து வீச்சில் ஒரு சிக்ஸரையும் பறக்க விட்டிருந்தார். அதேவேளையில் ஷுப்மன் கில், துனித் வெல்லலகே வீசிய 19-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் விரட்டி அசத்தினார்.

தொடக்க ஜோடி கொடுத்த அடித்தளத்தை பயன்படுத்தி ரன் வேட்டையாடிய விராட் கோலி 80 பந்துகளில் சதம் விளாசினார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவருக்கு 45-வது சதமாக அமைந்தது. அபாரமாக விளையாடிய விராட் கோலி 87 பந்துகளில், 12 பவுண்டரிகள், ஒருசிக்ஸருடன் 113 ரன்கள் எடுத்த நிலையில்ரஜிதா பந்தில் மெண்டிஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் ஐயர் 28, கே.எல்.ராகுல் 39, ஹர்திக் பாண்டியா 14, அக்சர் படேல் 9 ரன்கள் சேர்த்து வெளியேறினர். மொகமது ஷமி 4, மொகமது சிராஜ் 7 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணி சார்பில் கசன் ரஜிதா 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

374 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடக்க வீரரான பதும்நிசங்கா 72, தனஞ்ஜெயா டி சில்வா 47 ரன்கள் சேர்த்தனர். அவிஷ்கா பெர்னாண்டோ 5, குசால் மெண்டிஸ் 0, ஷாரித் அசலங்கா 23, வனிந்து ஹசரங்கா 16, துனித் வெல்லலகே 0, ஷமிகா கருணரத்னே 14 ரன்களில் நடையை கட்டினர்.

கேப்டன் தசன் ஷனகா 88 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 108ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதிக்கட்டத்தில் ஷனகா அதிரடியாக விளையாடிய போதிலும் அது வெற்றிக்கு கைகொடுக்காமல் போனது. அவருக்கு உறுதுணையாக களத்தில் நின்ற கசன் ரஜிதா 19 பந்துகளில் 9 ரன்கள் சேர்த்தார். 9-வது விக்கெட்டுக்கு ஷனகா, ரஜிதா ஜோடி100 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் உம்ரன் மாலிக் 3, மொகமது சிராஜ்2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.

இரு முறை தப்பித்த கோலி: விராட் கோலி இரு முறை ரஜிதாவின் பந்து வீச்சில் ஆட்டம் இழப்பதில் இருந்து தப்பித்தார். விராட் கோலி 52 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை குசால் மெண்டிஸ் தவறவிட்டார். மேலும் 81 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்சை ஷனகா கோட்டைவிட்டார். இந்த வாய்ப்புகளை விராட் கோலி சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

அதிகமான 300+ ரன்கள்: குவாஹாட்டி போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இந்தியா 373 ரன்கள் குவித்தது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி300-க்கும் மேற்பட்ட ரன்களை வேட்டையாடுவது இது 22-வது முறையாகும்.

27-வது முறை…: இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா முதல் விக்கெட்டுக்கு ஷுப்மன் கில்லுடன் இணைந்து 143 ரன்கள் சேர்த்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் சர்மா தொடக்க விக்கெட்டுக்கு 100-க்கும் அதிகமான ரன்களை சேர்ப்பது இது 27-வது முறையாகும். ஷிகர் தவணுடன் இணைந்து 18 முறையும், கே.எல்.ராகுலுடன் இணைந்து 5 முறையும், அஜிங்க்ய ரஹானேவுடன் இணைந்து 3 முறையும், ஷுப்மன் கில்லுடன் முதல் முறையாகவும் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 100-க்கும் அதிகமான ரன்களை சேர்த்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x