ஷனகா 98 ரன்களில் இருந்த போது ஷமி ஏன் அப்படி செய்தார் என தெரியவில்லை: மன்கட் குறித்து ரோகித்

ஷமி மற்றும் ரோகித்
ஷமி மற்றும் ரோகித்
Updated on
1 min read

கவுகாத்தி: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டி முடிந்ததும் ஷனகா 98 ரன்களில் இருந்த போது ஷமி ஏன் அப்படி செய்தார் என தனக்கு தெரியவில்லை என இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியின் கடைசி ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவருக்கு முன்னதாக இலங்கை அணியின் கேப்டன் 95 ரன்கள் எடுத்திருந்தார். ஷமி வீசிய கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் 2, 0 மற்றும் 1 ரன்களை அவர் எடுத்திருந்தார். நான்காவது பந்தின் போது நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த அவரை ஷமி அவுட் செய்திருந்தார். அந்த அப்பீல் மூன்றாவது நடுவரின் பார்வைக்கு சென்றிருந்தது. இருந்தாலும் ரோகித் உடனான உரையாடலுக்கு பின்னர் அதிலிருந்து பின்வாங்கினார். பின்னர் ஷனகா சதம் விளாசினார்.

“ஷமி ஏன் அப்படி செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. ஷனகா 98 ரன்களில் பேட் செய்து கொண்டிருந்தார். அவர் பேட் செய்த விதம் மிகவும் அற்புதமாக இருந்தது. நாங்கள் அவரை அப்படி அவுட் செய்ய விரும்பவில்லை. அதை செய்திருக்கவும் கூடாது. அவருக்கு எனது வாழ்த்துகள். மிகவும் சிறப்பாக விளையாடி இருந்தார்” என போட்டி முடிந்ததும் ரோகித் சொல்லி இருந்தார். கிரிக்கெட் விதிப்படி நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் உள்ள பேட்ஸ்மேனை பவுலர் பந்து வீசுவதற்கு முன்னர் ரன் அவுட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். உம்ரான் மாலிக், அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in