

கவுகாத்தி: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 373 ரன்களை குவித்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி தனது 73-வது சர்வதேச சதத்தை பதிவு செய்துள்ளார். அதேபோல இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் மற்றும் கில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் அந்த அணி இழந்தது. தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியுடன் விளையாடி வருகிறது.
ஒருநாள் தொடரின் முதல் போட்டி கவுகாத்தியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கில் 70 ரன்களிலும், ரோகித் 83 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் இடையே குட்டி பார்ட்னர்ஷிப் உருவானது. இருந்தாலும் ஸ்ரேயஸ், 28 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ராகுலுடன் 90 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கோலி. ராகுல் 39 ரன்களில் அவுட்டானார்.
மறுமுனையில் அதிரடியாக பேட் செய்து வந்த கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 45-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 87 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 129.89. ஹர்திக் 14 ரன்களிலும், அக்சர் படேல் 9 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 373 ரன்களை எட்டியது. இந்த போட்டியில் வெற்றி பெற இலங்கை 374 ரன்களை சேஸ் செய்ய வேண்டும்.