முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இலங்கை இன்று மோதல்

இலங்கைக்கு எதிராக முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள குவாஹாட்டி ஆடுகளத்தை பார்வையிட்ட இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட். படம்: பிடிஐ
இலங்கைக்கு எதிராக முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள குவாஹாட்டி ஆடுகளத்தை பார்வையிட்ட இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட். படம்: பிடிஐ
Updated on
2 min read

குவாஹாட்டி: இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி குவாஹாட்டியில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற டி 20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் இன்று பிற்பகலில் குவாஹாட்டியில் நடைபெறுகிறது.

கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பி இருப்பது பேட்டிங்கை வலுப்படுத்தக்கூடும். வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதனால் இலங்கைக்கு எதிரான தற்போதைய தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் ஷுப்மன் கில் களமிறங்க உள்ளார். இதை நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ரோஹித் உறுதி செய்தார். அதேவேளையில் சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷனை வெளியே அமர வைப்பது துரதிருஷ்டவசமானது என்றும் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

3-வது இடத்தில் வழக்கம் போல விராட் கோலி விளையாடுவார். இதற்கு அடுத்த இரு இடங்களில் ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் இடம் பெறக்கூடும். ஸ்ரேயஸ் ஐயர் கடந்த ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்போட்டியில் 15 ஆட்டங்களில் 55.69 சராசரியுடன் 724 ரன்கள் சேர்த்திருந்தார். துணைக்கண்டங்களில் உள்ள ஆடுகளங்களில் நடு ஓவர்களில் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்வதிலும், சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதிலும் ஸ்ரேயஸ் ஐயர் சிறப்பாக செயல்படக்கூடியவர். கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்குவார்.

டி 20 கிரிக்கெட் போட்டியில் அசத்தி வரும் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் மட்டை வீச்சு பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. 16 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், இரு அரைசதங்களுடன் 384 ரன்களே சேர்த்துள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் இடம் பெறுவார்கள்.

பிரதான சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் ஒருவர் இடம் பெறுவார். மொகமது ஷமி அணிக்கு திரும்பி இருப்பது வேகப்பந்து வீச்சு துறைக்கு பலம் சேர்க்கக்கூடும். மொகமது சிராஜ், உம்ரன் மாலிக், அர்ஷ் தீப் சிங் ஆகியோரும் இலங்கை பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

இலங்கை அணியை பொறுத்த வரையில் டி 20 தொடரை இழந்துள்ளதால் ஒருநாள் போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடுவதில் தீவிர கவனம் செலுத்தும். பேட்டிங்கில் கேப்டன் தசன் ஷனகா, பதும் நிசங்கா, ஷாரித் அசலங்கா பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். சுழற்பந்து வீச்சில் ஜெஃப்ரி வாண்டர்சே இந்திய பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி தரக்கூடும்.

நேரம்: பிற்பகல் 1.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in