

அடிலெய்டு: அடிலெய்டில் நடைபெற்று வந்த சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலென்கா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
அடிலெய்டில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அரைனா சபலென்காவுடன், செக் குடியரசு வீராங்கனை லிண்டா நோஸ்வோ மோதினார்.
இந்தப் போட்டியில் மிகவும் அபாரமாக விளையாடிய சபலென்கா 6-3, 7-6 (4) என்ற செட் கணக்கில் நோஸ்வோவை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இது சபலென்கா பெறும் 11-வது டபிள்யூடிஏ பட்டமாகும்.
முந்தைய சுற்று ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகள் ஆன்ஸ் ஜபேர், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் விக்டோரியா அசரென்கா, தாரியா கசத்கினா போன்ற வீராங்கனைகளை வீழ்த்திய நோஸ்கோவா, இறுதிச் சுற்றில் எளிதில் தோல்வி அடைந்து 2-வது இடம் பிடித்தார். தகுதிச் சுற்று மூலம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர் லிண்டா நோஸ்கோவோ என்பது குறிப்பிடத்தக்கது.