

கோவை: முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரகு முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேசியதாவது: ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்கான மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக பங்கேற்கும் வகையில் 42 வகையான மாவட்ட அளவிலான போட்டிகளும், 8 வகையான மண்டல அளவிலான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
மாவட்ட அளவிலான போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களிலும், மாநில அளவிலான போட்டிகள் மே மாதமும் நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொள்ள ஏதுவாக தேவையான விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
போட்டிகள் நடத்தப்படும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், இடங்களை சுத்தம் செய்தல், அடிப்படை வசதிகள், மருத்துவ முதலுதவி உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். முதல்வர் கோப்பைக்கான இணையதள பதிவு வரும் 17-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்,’’ என்றார்.