

உலகக் கோப்பையில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிக்கப்பட்ட பிறகு குரூப் சுற்றில் முதலிடத்தைப் பிடித்த 8 அணிகளும் காலிறுதிக்கு முன்னேறியிருப்பது இதுவே முதல்முறையாகும். இதில் போர்ட்டலீசாவில் இன்று இரவு நடைபெறும் 2-வது காலிறுதியில் போட்டியை நடத்தும் பிரேசிலும், கொலம்பியாவும் மோதுகின்றன.
பிரேசில் அணி இரு வெற்றி, ஒரு டிராவுடன் குரூப் சுற்றில் முதலிடத்தைப் பிடித்தது. ஆனால் கொலம்பியா அணியோ குரூப் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்டதோடு, இந்த உலகக் கோப்பையில் அதிக கோல்களை அடித்த அணிகள் வரிசையிலும் 2-வது இடத்தில் (11 கோல்கள்) உள்ளது. நாக் அவுட் சுற்றின் முதல் ஆட்டத்தில் பிரேசில் அணி, பெனால்டி ஷூட் வரை சென்று போராடியே சிலியை வென்றது. ஆனால் கொலம்பியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த உருகுவேயை எளிதாகத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பிரேசில் அணியின் ஸ்டிரைக்கர் நெய்மருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகமே. பிரேசிலின் குஸ்டாவோ இரு மஞ்சள் அட்டை பெற்றதால் அவரும் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாது. இந்த இரு விஷயங்களும் பிரேசிலுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
அதேநேரத்தில் கொலம்பியா அணிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அந்த அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்வது ஸ்டிரைக்கர் ஜேம்ஸ் ரோட்ரிகஸ்தான். இந்த உலகக் கோப்பையில் 5 கோல்களை அடித்துள்ள அவர், அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். கேப்டன் மார்ட்டினிஸ் உள்ளிட்டோரும் அந்த அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் கோப்பையை வெல்வதில் தீவிரமாக உள்ளது பிரேசில். அதேநேரத்தில் இதுவரை வெற்றியை மட்டுமே ருசித்துள்ள கொலம்பியா அந்த வெற்றியை தொடர முயற்சிக்கும். அதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. இந்த உலகக் கோப்பையில் 4 வெற்றி உள்பட மொத்தம் 12 ஆட்டங்களில் தொடர்ச் சியாக வெற்றி கண்டுள்ள கொலம்பி யாவின் தொடர் வெற்றிக்கு பிரேசில் முற்றுப்புள்ளி வைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிரேசிலும், கொலம்பியாவும் 25 முறை மோதியுள்ளன. அதில் பிரேசில் 15 முறையும், கொலம்பியா 2 முறையும் வெற்றி கண்டுள்ளன. 8 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.