சூர்யகுமார் யாதவ் சரவெடி சதம் - இலங்கைக்கு 229 ரன்கள் இலக்கு

சூர்யகுமார் யாதவ் சரவெடி சதம் - இலங்கைக்கு 229 ரன்கள் இலக்கு

Published on

ராஜ்கோட்: இலங்கை அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 228 ரன்களை சேர்த்துள்ளது.

தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 2 ரன்னில் வெற்றி பெற்றது. புனேயில் நடந்த 2-வது போட்டியில் இலங்கை அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணிக்கு இஷான் கிஷன் - சுப்மன் கில் இணை தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இதில் முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் 1 ரன்களில் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த ராகுல் திரிபாதி சுப்மன் கில்லுடன் கைகோர்த்தார். இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த, 6-வது ஓவரில் ராகுல் திரிபாதி 35 ரன்களுடன் நடையைக்கட்டினார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் இலங்கை பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடிக்க, மறுபுறம் சுப்மன் கில் 46 ரன்களுடன் களத்திலிருந்து வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா இருவரும் சொல்லி வைத்தார் போல தலா 4 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். நிலைத்து நின்று ஆடிய சூர்யகுமார் யாதவின் அதிரடியால் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்களுடனும், அக்சர் படேல் 9 பந்துகளில் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இலங்கை அணி தரப்பில் தில்சான் மதுஷங்கா 2 விக்கெட்டுகளையும், காசுன் ரஜிதா, வஹின்டு ஹசரங்கா, சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா ஒருவிக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in