Published : 19 Dec 2016 06:05 PM
Last Updated : 19 Dec 2016 06:05 PM

கேரி சோபர்ஸ், பாப் சிம்சனுடன் இணைந்த கருண் நாயர்: சாதனைத் துளிகள்

சென்னை டெஸ்ட் போட்டியில் சற்றும் எதிர்பாராதவிதமாக முச்சதம் கண்டு 303 நாட் அவுட் என்று சாதனை புரிந்த கருண் நாயர், இதன் மூலம் உயர்தர வீரர்களான கேரி சோபர்ஸ், பாப் சிம்சன் ஆகியோருடன் இணைந்துள்ளார்.

கருண் நாயர் முச்சத சாதனைத் துளிகள்:

சேவாக் என்ற ஒரே வீரரே இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சத சாதனை நிகழ்த்தியவர், இவர் பாகிஸ்தானுக்கு எதிராக முல்டானில் 2003-04 தொடரில் 309 ரன்களையும் பிறகு சென்னையில் 2007-08-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன்களையும் விளாசியிருந்தார், இவருக்குப் பிறகு தற்போது கருண் நாயர் முச்சத நாயகராகியுள்ளார். சேவாக் இதுதவிர இலங்கைக்கு எதிராக 293 ரன்கள் எடுத்து உலக சாதனை முச்சதத்தை தவற விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் கேரி சோபர்ஸ் தனது முதல் சதத்தை முச்சதமாக மாற்றினார், இவர் 1957-58-ல் கிங்ஸ்டன் மைதானத்தில் 365 நாட் அவுட் என்று முதலில் சாதனை நிகழ்த்தினார், பிறகு பாப் சிம்சன் 1964 ஆஷஸ் தொடரில் ஓல்ட்டிராபர்டில் 311 எடுத்தது அவரது முதல் சதம் முச்சதமான தருணமாகும். தற்போது இந்தப் பட்டியலில் கருண் நாயர் இங்கிலாந்துக்கு எதிராக தன் முதல் சதத்தையே முச்சதமாக மாற்றினார்.

5-ம் நிலை அல்லது அதற்கு கீழே களமிறங்கி முச்சதம் கண்டார் கருண் நாயர். இதற்கு முன்பாக மைக்கேல் கிளார்க் 5-ம் நிலையில் இறங்கி இந்தியாவுக்கு எதிராக 2011-12 தொடரில் சிட்னியில் 329 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது. அதே போல் பிரண்டன் மெக்கல்லம், 1934 ஆஷஸ் தொடரில் டான் பிராட்மேன் லீட்ஸில் எடுத்த 304 ரன்கள் உள்ளது.

ஒரே நாளில் இன்று சென்னையில் 232 ரன்கள் எடுத்தார் கருண் நாயர். இது ஒரே நாளில் அதிகபட்ச ரன்களில் 3-வது இடமாகும். இலங்கைக்கு எதிராக சேவாக் ஒரே நாளில் மும்பையில் 284 ரன்களை விளாசியுள்ளார். இதே சேவாக் சென்னையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரே நாளில் 257 ரன்கள் எடுத்தார். மேலும் கருண் நாயர் ஒரேநாளில் எடுத்த 232 ரன்கள் உலக அளவில் 10-வது அதிகபட்ச ரன்களாகும்.

கருண் நாயர் தனது 3-வது இன்னிங்ஸில் முதல் சதத்தை முச்சதமாக மாற்றியுள்ளார். இது மிகக்குறைவான இன்னிங்சில் முச்சதம் அடித்த பெருமைக்குரியதாகும்,. முன்னதாக லென் ஹட்டன் தனது முதல் முச்சதத்தை 9-வது இன்னிங்ஸில் அடித்தார். டான் பிராட்மேன், ஜான் எட்ரிச் ஆகியோர் 13 இன்னின்ஸ்களில் முச்சதம் கண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x