IND vs SL 2-வது டி20 | இலங்கை 206 ரன்கள் குவிப்பு: சொதப்பிய இந்திய வேகப் பந்துவீச்சு

படம்: ட்விட்டர்
படம்: ட்விட்டர்
Updated on
1 min read

புனே: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் குசல் மென்டிஸ், அசலங்கா மற்றும் கேப்டன் ஷனகா ஆகியோர் அபாரமாக விளையாடி, அதிரடியாக ரன் குவித்தனர். இந்திய அணி சார்பில் அக்சர் படேல், சஹல் மற்றும் கேப்டன் பாண்டியா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். ஆனாலும் பிற பவுலர்கள் ரன்களை வாரிக் கொடுத்திருந்தனர்.

இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது டி20 போட்டி இன்று புனேவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

இலங்கை அணி இந்த போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ய முடியும். இல்லையெனில் தொடரை இழக்க வேண்டி இருக்கும். அதை மனதில் வைத்து ஆடியது அந்த அணி. அதனால் தொடக்கம் முதலே பந்தை பவுண்டரிக்கு விரட்டுவதில் பிஸியாக இருந்தனர் இலங்கை பேட்ஸ்மேன்கள்.

முதல் விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்கள். மென்டிஸ், 31 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அதன் பிறகு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அக்சர் படேல் மற்றும் சஹல் அபாரமாக பந்து வீசி இலங்கையில் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.

ஆனாலும் அது அனைத்தும் கடைசி 5 ஓவர்களில் தலைகீழாக மாறியது. மீண்டும் இலங்கை பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பை தொடர்ந்தனர். 15 ஓவர்கள் முடிவில் 129 ரன்கள் எடுத்திருந்த அந்த அணி கடைசி 30 பந்துகளில் 77 ரன்கள் குவித்தது. இதற்கு காரணம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கன்ட்ரோல் இன்றி பந்து வீசியதுதான். அதிலும் நோ-பால் வீசி பார்வையாளர்களை இம்சித்தனர்.

இலங்கை அணியின் கேப்டன் 22 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். அசலங்கா, 19 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். அதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 206 ரன்களை குவித்தது. தற்போது இந்தியா இலக்கை விரட்டி வருகிறது. 3 ஓவர்களுக்குள் இஷான் கிஷன், கில் மற்றும் திரிபாதி ஆகியோர் தங்களது விக்கெட்டை இழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in