

சிட்னி: ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை தன்வசப்படுத்தியது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரரான டேவிட் வார்னர் 10 ரன்களில் அன்ரிச் நார்ட்ஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய மார்னஸ் லபுஷேன், உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து இன்னிங்ஸை கட்டமைத்தார். சிறப்பாக விளையாடி வந்த லபுஷேன் 151 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்த நிலையில் அன்ரிச் நார்ட்ஜ் பந்தில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உஸ்மான் கவாஜா 121 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.