Published : 05 Jan 2023 05:49 AM
Last Updated : 05 Jan 2023 05:49 AM
புனே: இலங்கை அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று மோதுகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் டி 20 தொடரை கைப்பற்றும்.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 163 ரன்கள் இலக்கை விரட்டிய இலங்கை அணி ஆட்டத்தை கடைசி பந்து வரை எடுத்துச் சென்று 160 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியால் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது ஆட்டம் புனேவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் டி 20 தொடரை இந்திய அணி கைப்பற்றும். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.
முதல் ஆட்டத்தில் தொடக்க வீரரான ஷுப்மன் கில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தத் தவறினார். அவரது பேட்டிங் அணுகுமுறையானது முதல் பந்தில் இருந்தே தாக்குதல் ஆட்டம் தொடுப்பதாக இல்லை. களத்தில் வேரூன்றிய பின்னர் அதிரடியாக விளையாடும் பாணியை பின்பற்றுபவராக ஷுப்மன் கில் உள்ளார். ஐபிஎல் தொடர்களில் அவர், இவ்வாறுதான் செயல்பட்டார்.
சமீபகாலமாகவே இந்திய அணி நிர்வாகம் டி 20 கிரிக்கெட்டில் பேட்டிங்கில் அச்சமற்ற அணுகுமுறையை செயல்படுத்த முனைப்புகாட்டி வருகிறது. இதனால் ஷுப்மன் கில் இன்றைய ஆட்டத்தில் பவர்பிளேவில் மட்டையை சுழற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். மேலும் ருதுராஜ் கெய்க்வாட் தனக்கான வாய்ப்புக்காக காத்திருப்பதால் தனது இடத்தை அணியில் பலப்படுத்திக் கொள்ள உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயமும் ஷுப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று முதல் ஆட்டத்தில் மட்டை வீச்சில் சிறப்பாக செயல்பட தவறிய சூர்யகுமார் யாதவ் தீவிர முனைப்புடன் செயல்படுவதில் கவனம் செலுத்தக்கூடும். அதேவேளையில் வான்கடேவில் நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக பேட் செய்த தீபக் ஹூடா, அக்சர் படேல் ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும்.
பந்து வீச்சில் அறிமுக வீரராக களமிறங்கிய ஷிவம் மாவி முழுமையாக 4 ஓவர்களை வீசி 22 ரன்களை மட்டும் வழங்கி 4 விக்கெட்கள் வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் 2 விக்கெட்கள் கைப்பற்றிய உம்ரன் மாலிக்கும் தனது அசுர வேகத்தால் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தார். இந்த வேகக்கூட்டணி மீண்டும் ஒரு முறை இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரக்கூடும். சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சாஹல் 2 ஓவர்களைவீசி 26 ரன்களை தாரைவார்த்திருந்தார். அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள சிறப்பாக செயல்பட வேண்டிய நிலைக்கு அவர், தள்ளப்பட்டுள்ளார்.
இலங்கை அணியை பொறுத்தவரையில் இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் செயல்படுவதில் முனைப்புக் காட்டக்கூடும். அந்த அணியின் பந்து வீச்சுவனிந்து ஹசரங்கா, தீக்சனா ஆகியோரையே நம்பி உள்ளது. இந்த சுழல் கூட்டணி முதல் ஆட்டத்தில் கூட்டாக 8 ஓவர்களை வீசி 2 விக்கெட்களை வீழ்த்தியதுடன் 51 ரன்களை விட்டுக்கொடுத்திருந்து. இவர்கள் மீண்டும் ஒரு முறைஇந்திய பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
நேரம்: இரவு 7
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT