

மும்பை: கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்துக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதற்காக அவர் டேராடூனில் தற்போது சிகிச்சை பெற்று வரும் மேக்ஸ் மருத்துவமனையில் இருந்து விமானம் மூலமாக மும்பை கொண்டு வரப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்தபோது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடைபெற்றது. கார் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி இருந்த அவரை அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்தில் அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது.
மும்பையில் சிகிச்சை: “பந்த்துக்கு மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அவரை விளையாட்டு மருத்துவத்திற்கான மையத்தின் தலைவர், மருத்துவர் தின்ஷா பார்திவாலா நேரடியாக கண்காணிப்பார். இங்கு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து அவரை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணிக்கும். இந்த தருணத்தில் அவருக்கு பக்கபலமாக வாரியம் இருக்கும்” என அறிக்கை மூலம் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
பசுமை வழித்தடம்: ரிஷப் பந்த்தை மும்பை விமான நிலையத்தில் இருந்து கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கான வழித்தடம் பசுமை வழித்தடமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல். அவரை அந்த மருத்துவமனைக்கு மாற்ற விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல். இந்த வழித்தடத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல் அனைத்தும் பச்சை நிறத்தில் ஒளிரும்.