

சாவோ பாவ்லோ: கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.
3 முறை உலகக் கோப்பை கால்பந்து சாம்பியனான பிரேசிலின் ஜாம்பவான் பீலே (82), கடந்த டிசம்பர் 29-ம் தேதி மரணம் அடைந்தார். செரிமான மண்டலப் பகுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பீலே, சாவோ பாவ்லோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி காலமானார்.
நேற்று அதிகாலை பீலேவின் உடல், அவர் தனது இளமை காலத்தில் கால்பந்து விளையாடிய சாண்டோசில் உள்ள விலா பெல்மிரோ மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மைதானத்துக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பீலேவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மைதானத்தின் நடுவே பந்தல் அமைக்கப்பட்டு அதன் உள்ளே பீலேவின் உடல் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அவரது மகன் எடிசன், ஃபிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். பீலேவின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி மீது சாண்டோஸ் கிளப்பின் கொடியும், பிரேசில் நாட்டின் தேசியக் கொடியும் போர்த்தப்பட்டிருந்தது.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது மனைவி ரோசங்கலா ஜான்ஜாவுடன் இணைந்து வந்து அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் ‘கால்பந்து அரசன்’ பீலேவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சாண்டோஸ் தெருக்களின் வழியாக பயணித்த பீலேவின் உடலுக்கு சாலை நெடுகிலும் மக்கள் அஞ்சலி செலுத்தி அவருக்கு விடை கொடுத்தனர். நெக்ரோபோல் எகுமெனிகா நினைவிடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பீலேவின் உடல் அங்குள்ள செங்குத்தான 14 மாடி கட்டடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.