

ராஜ்கோட்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா வேகப்பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனத்கட் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.
ராஜ்கோட்டில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டெல்லி அணி முதலில் பேட் செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரை வீசிய சவுராஷ்டிரா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனத்கட் 3,4,5-வது பந்துகளில் முறையே துருவ் ஷோரே (0), வைபவ் ராவல் (0), யாஷ் துல் (0) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் 88 வருட ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் ஜெயதேவ் உனத்கட்.
இதற்கு முன்னர் 2017-18ம் ஆண்டு ரஞ்சி கோப்பை சீசனில் மும்பைக்கு எதிராக கர்நாடகாவின் வினய்குமார் இரு ஓவர்களில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். அவர் முதல் ஓவரின் கடைசி பந்திலும் அதன் பின்னர் 3-வது ஓவரின் முதல் இரு பந்துகளிலும் விக்கெட்கள் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார்.
உனத்கட்டின் அபாரமான பந்து வீச்சால் டெல்லி அணி ரன் கணக்கை தொடங்குவதற்கு முன்னதாகவே முதல் 3 விக்கெட்களை தாரை வார்த்தது. சிராக்ஜானி வீசிய அடுத்த ஓவரில் ஆயுஷ் படோனி (0) ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜெயதேவ் உனத்கட் தனது அடுத்தடுத்த ஓவர்களில் ஜாண்டி சித்து (4), லலித் யாதவ் (0), லக்சய் தரேஜா (1) ஆகியோரையும் வெளியேற்றினார். இதனால் டெல்லி அணி 10 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து திணறியது.
இதன் பின்னர் பிரன்ஷு விஜயரன், ஹிருத்திக் ஷோக்கீன் ஜோடி நிதானமாக விளையாடியதால் டெல்லி அணி 50 ரன்களை கடந்தது. 43 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை பிரேரக் மன்கட் பிரித்தார். பிரன்ஷு விஜயரன் 15 ரன்களில் பிரேரக் மன்கட் பந்தில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்கள் சரிந்தாலும் ஹிருத்திக் ஷோக்கீன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஷிவாங்க் வசிஷ்ட்டை 38 ரன்களில் வெளியேற்றினார் உனத்கட். அடுத்த பந்திலேயே குல்திப் யாதவ் (0) நடையை கட்ட டெல்லி அணி 35 ஓவர்களில் 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
ஹிருத்திக் ஷோக்கீன் 90 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சவுராஷ்டிரா அணி தரப்பில் ஜெயதேவ் உனத்கட் 39 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்களை வீழ்த்தினார். தொடர்ந்து பேட் செய்த சவுராஷ்டிரா அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 46 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரரான ஹர்விக் தேசாய் 124 பந்துகளில், 15 பவுண்டரிகளுடன் 104 ரன்களும், சிராக் ஜானி 44 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.