

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதியில் ஹரியாணா அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜார்க்கண்ட் அணி முதன்முறையாக அரை இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது.
வதோதராவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹரியாணா முதல் இன்னிங்ஸில் 95.3 ஓவர் களில் 258 ரன்களுக்கு ஆட்டமிழந் தது. அதிகபட்சமாக சைதன்யா பிஷ்னோய் 41, பாலிவால் 42 ரன்கள் எடுத்தனர். ஜார்க்கண்ட் தரப்பில் சுழற்பந்து வீச்சாளரான ஷபாஸ் நதீம் 7 விக்கெட்களை சாய்த்தார்.
ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 120 ஓவர்களில் 345 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. விராட் சிங் 107, ஜக்கி 77 ரன்கள் எடுத்தனர். ஹரியாணா தரப்பில் படேல் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஹரியாணா 97.1 ஓவரில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒரு கட்டத்தில் 178 ரன்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே இழந்திருந்த அந்த அணி கடைசி 8 விக்கெட்களை 116 ரன்களுக்கு தாரை வார்த்தது.
அதிலும் 62-வது ஓவர் முதல் 71-வது ஓவர்களுக்குள் தான் ஹரியாணா கடும் சரிவை கண்டது. இந்த ஓவர்களில் 15 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்கள் வீழ்ந்தன. இதனால் 193 ரன்களுக்கு 7 விக்கெட்கள் என்ற நிலைக்கு சென்ற ஹரியாணா அணியால் சரிவில் இருந்து மீளமுடியாமல் போனது.
அந்த அணி தரப்பில் அதிகபட்ச மாக சைதன்யா பிஷ்னோய் 52, ரோகிலா 43, சிவம் சவுகான் 43, ஷைனி 41 ரன்கள் சேர்த்தனர். ஜார்க்கண்ட் தரப்பில் ஷபாஸ் நதீம் 4, சமர் குவாட்ரி 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து 176 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜார்க்கண்ட் அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 30.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 61 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் விளாசினார். ஆனந்த் சிங் 27, விராட் சிங் 21, சுமித் குமார் 18, ஜக்கி 8, கவுஷால் சிங் 12 ரன்கள் சேர்த்தனர். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சவுரவ் திவாரி தலைமையிலான ஜார்க்கண்ட் அணி முதன் முறையாக அரை இறுதியில் கால்பதித்தது.
இந்த சீசனில் ஜார்க்கண்ட் அணியினருடன் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் தோனி, அந்த அணி வீரர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.