

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. தற்போது இரு அணிகளும் டி20 தொடரில் பலப்பரீட்சை செய்து வருகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி மும்பை நகரின் வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் 163 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை அணி இரண்டாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. அறிமுக வீரராக களமிறங்கிய இந்திய பௌலர் ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரில் பந்தை வெவ்வேறு லெந்தில் வீசி எதிரணி பேட்ஸ்மேனான நிசங்காவை குழப்பி, கடைசி பந்தில் அவரை க்ளீன் போல்டும் செய்தார். தொடர்ந்து அவர் வீசிய இரண்டாவது ஓவரில் தனஞ்ஜெய டி சில்வா விக்கெட்டையும் கைப்பற்றினார்.
அசலங்காவை உம்ரான் மாலிக் வெளியேற்ற சிறிதுநேரம் நிலைத்து ஆடிய குஷல் மெண்டிஸை 28 ரன்களுக்கு ஹர்ஷல் படேல் அவுட் ஆக்கினார். அதன்பின் ராஜபக்சா, ஹஸரங்கா என சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தாலும், கேப்டன் தசுன் ஷனகா அதிரடியாக விளையாடி இந்திய பௌலர்களுக்கு சிறிதுநேரம் ஆட்டம் காட்டினார். 26 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் சேர்த்த அவரை உம்ரான் மாலிக் வீழ்த்தினார். இதன்பின் ஆட்டம் இந்திய வசம் வந்தது. கடைசி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட அக்சர் பந்துவீசினார்.
முதல் பந்தே வொயிடாக வீசிய அவரின் பந்துவீச்சில் மூன்றாவது பந்தில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் இலங்கை வீரர் கருணாரத்னே. 3 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட அடுத்த இரண்டு பந்தில் ஒரு ரன்னும் ஒரு ரன் அவுட்டும் எடுக்கப்பட்டது. ஒரு பந்தில் 4 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஒரு ரன் மட்டுமே இலங்கை எடுத்தது. இதனால் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தொடரில் முதல் வெற்றி பெற்றது.
24 வயதான ஷிவம் மாவி, தனது கடைசி ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தியதன்மூலம் அறிமுக போட்டியில் 4 விக்கெட் எடுத்தார். முன்னதாக, இந்திய வீரர்கள் ஆட்டத்தில் சில இடங்களில் மிஸ் பீல்ட் செய்திருந்தனர். அதேநேரம் இஷான் கிஷன் அசலங்காவை அற்புதமாக கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார்.
இந்திய அணி இன்னிங்ஸ்: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேப்டன் பாண்டியா 29 ரன்களில் வெளியேறினார். பின்னர் இணைந்த தீபக் ஹூடா 23 பந்துகளில் 41 ரன்களும், அக்சர் படேல் 20 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். இருவரும் கடைசி வரையில் தங்கள் விக்கெட்டுகளை இழக்கவில்லை. இதில் ஹூடா 4 சிக்ஸர்களை விளாசினார்.
இலங்கை அணி பவுலர்கள் தங்களது தரமான லைன் மற்றும் லெந்தினால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆட்டத்தின் சில ஓவர்களில் அச்சுறுத்தினர். தற்போது இலங்கை அணி 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஒரு கட்டத்தில் 150 ரன்களை கடப்பதே சவாலான காரியமாக இருந்தது. அதனை தீபக் ஹூடா, அக்சர் படேல் கூட்டணி தகர்த்தது. இருவரும் 68 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.