

மெல்போர்ன்: நடப்பு பிக் பேஷ் லீக் தொடரில் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த எதிரணி பேட்ஸ்மேனை ‘மன்கட்’ முறையில் ரன் அவுட் செய்து அப்பீல் செய்தார் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் சாம்பா. ஆனால், அதற்கு அவுட் கொடுக்க மறுத்தார் மூன்றாவது நடுவர்.
மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில் ஸ்டார்ஸ் அணிக்காக சாம்பா விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனும் அவர்தான். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் இந்தச் சம்பவம் நடந்தது.
கடைசி ஓவரின் 5-வது பந்தை வீசுவதற்கு முன்னர் இது நடந்துள்ளது. பந்தை வீச வந்த சாம்பா அதை பாதியில் நிறுத்தி கிரீஸுக்கு வெளியே இருந்த எதிரணி பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்துள்ளார். தொடர்ந்து அதற்காக அப்பீலும் செய்தார். இதில் முடிவை எட்ட கள நடுவர் மூன்றாவது நடுவரை நாடினார். அதில் சாம்பா தனது பவுலிங் ஆக்ஷனை நிறைவு செய்த காரணத்தால் அவுட் கொடுக்க மறுத்தார் மூன்றாவது நடுவர். இந்தப் போட்டியில் சாம்பா விளையாடிய ஸ்டார்ஸ் அணி தோல்வியை தழுவியது.
மன்கட் அவுட்: இந்த முறை அவுட் அதிகாரப்பூர்வ ரன் அவுட் ஆக கருதப்படும் என எம்சிசி கடந்த மார்ச் வாக்கில் உறுதிப்படுத்தியது. நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருக்கும் பேட்ஸ்மேன் பவுலர்கள் பந்து வீசும்போது கிரீஸை விட்டு வெளியே செல்லக்கூடாது. அப்படிச் சென்றால் 'மன்கட் அவுட்' செய்யலாம். இந்த விதி ஏற்கெனவே கிரிக்கெட்டில் இருந்தாலும், இது சரியான நடைமுறையாக இருக்காது என்று கிரிக்கெட் பிரபலங்கள் பலர் இந்த முறையில் அவுட் செய்யாமல் இருந்தனர். ஆனாலும் இதனை அதிகாரபூர்வ ரன் அவுட் ஆக அங்கீகரித்துள்ளது எம்சிசி.