மறக்குமா நெஞ்சம் | இதே நாளில் 2004-ல் கவர் டிரைவ் ஆடாமல் 241 ரன்கள் குவித்த சச்சின்!

சச்சின் டெண்டுல்கர் | கோப்புப்படம்
சச்சின் டெண்டுல்கர் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: கடந்த 2004-ல் இதே நாளில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கவர் டிரைவ் ஆடாமல் 241 ரன்கள் குவித்து அசத்தினார். ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டியின் மறக்க முடியாத நினைவுகளை கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம்.

‘மாஸ்டர் பிளாஸ்டர்’ என கிரிக்கெட் உலகில் அறியப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் என மொத்தம் 100 சதங்களை சர்வதேச கிரிக்கெட் உலகில் பதிவு செய்துள்ளார். இருந்தாலும் அவரது கிரிக்கெட் வாழ்வில் 2004-ல் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பதிவு செய்த சதம் ரொம்பவே ஸ்பெஷல். அது அவருக்கு மட்டுமல்ல ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகருக்கும் ஸ்பெஷல்தான்.

4 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அந்த டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகளில் 5 இன்னிங்ஸ் விளையாடி முறையே 0, 1, 37, 0, 44 ரன்களை எடுத்திருந்தார் சச்சின். இந்த மூன்று போட்டிகளும் 2003 டிசம்பர் மாதம் நடைபெற்றது.

புது வருடமான 2004 பிறந்தது. அதோடு சச்சினும் தனது ஆட்ட யுக்தியை மாற்றி அமைத்தார். இந்த முறை அதே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேர்த்தியான மற்றும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சச்சினுக்கு அந்த தொடரில் ஆப்-ஸ்டம்புக்கு வெளியே 4 மற்றும் 5-வது ஸ்டம்ப் லைனில் பந்தை வீசும் திட்டத்தை மிக சிறப்பாக செயல்படுத்தி இருந்தனர் ஆஸி. பவுலர்கள். அவரும் அந்த பந்தை டிரைவ் ஆட முயன்று விக்கெட்டுகளை இழந்தார்.

ஆனால், சிட்னி டெஸ்ட் போட்டியில் அதை மாற்றினார். அந்த லைனில் வந்த பந்தை அவர் ஆடவே இல்லை. அந்த முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார். அதனால் தனது பேவரைட் ஷாட்களில் ஒன்றான கவர் டிரைவை அவர் ஆடவே இல்லை. அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 613 நிமிடங்கள் பேட் செய்தார். 436 பந்துகளை எதிர்கொண்டு 241 ரன்களை குவித்தார். இந்த முறை சச்சினை ஆஸ்திரேலிய அணியின் பவுலர்களால் அவுட் செய்யவே முடியவில்லை.

இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 60 ரன்களை அவர் குவித்தார். அப்போதும் அவரை எதிரணியினாரால் அவுட் செய்ய முடியவில்லை. இந்தப் போட்டியில் மீண்டும் மீண்டும் அந்த லைனில் பந்து வீசிய எதிரணி பவுலர்கள் மற்றும் கேட்ச் வரும் என எதிர்பார்த்த ஸ்லிப் பீல்டர்களுக்கும் ஏமாற்றமும், சோர்வும்தான் எஞ்சியது. சச்சினின் ஆகச்சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in