

மும்பை: இந்திய மண்ணில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொண்ட இரு அணிகளுக்கு இடையிலான தொடரில் இதுவரை இலங்கை வென்றது இல்லை. 1982 முதல் இருந்து வரும் இந்தத் தேடலுக்கு இலங்கை அணி இந்த முறை முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது இந்தியாவின் வெற்றி முகம் தொடருமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்திய மண்ணில் நடைபெறும் இந்தத் தொடரை வெல்லும் நோக்கத்துடன் இலங்கை களம் காண்கிறது.
கடந்த 1982 முதல் இந்தியாவில் இதுவரை 24 தொடர்களில் இலங்கை விளையாடி உள்ளது. அதில் 20 தொடர்களை இழந்துள்ளது. 4 சமனில் முடிந்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற 9 டெஸ்ட் தொடர்களில் 7 தொடர்களை இழந்துள்ளது. 2 சமனில் முடிந்துள்ளது. அதேபோல இரு அணிகளும் இந்தியாவில் 10 ஒருநாள் தொடர்களில் விளையாடி உள்ளன. அதில் 9 தொடர்களை இந்தியா வென்றுள்ளது. ஒன்று சமனில் முடிந்துள்ளது.
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்தியாவில் இரு அணிகளும் 5 தொடர்களில் விளையாடி உள்ளன. அதில் நான்கு தொடர்களை இந்தியா வென்றுள்ளது. ஒரு தொடர் சமனில் முடிந்துள்ளது. கடந்த 2022-ல் இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை இழந்திருந்தது.
கோலி, ரோகித், ராகுல், பும்ரா போன்ற வீரர்கள் இல்லாத இந்திய அணியை டி20 தொடரில் வெல்ல இலங்கை அணி அதீத முயற்சிகளை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.