

உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மிண்டன் தொடர் துபையில் இன்று தொடங்குகிறது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் உலக தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ளவர்கள் கலந்துகொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றனர்.
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து முதன்முறையாக இந்த தொடரில் விளையாடுகிறார். அவர் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளார். இதே பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அஹானே யமாகுச்சி, சீனாவின் சன் யு, ஸ்பெயினின் கரோலினா மரின் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
போட்டி அட்டவணைப்படி ஒலிம்பிக் இறுதிப் போட்டியை போன்று மீண்டும் கரோலினா மரினுடன் சிந்து மோத உள்ளார். இந்த ஆட்டம் 16-ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக இன்று தனது முதல் ஆட்டத்தில் யமாகுச்சியுடன் சிந்து மோத உள்ளார். இதை தொடர்ந்து நாளை சன் யுவை எதிர்கொள்கிறார்.
சிந்து கூறும்போது, “துபை போட்டியில் விளையாட உள்ளது பெருமையாக உள்ளது. தற்போது சிறந்த பார்மில் உள்ளேன். அதை அப்படியே தொடருவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.