ஆஸ்திரேலியா ஏ பந்துவீச்சைப் பின்னி எடுத்த நமன் ஓஜா இரட்டை சதம்

ஆஸ்திரேலியா ஏ பந்துவீச்சைப் பின்னி எடுத்த நமன் ஓஜா இரட்டை சதம்
Updated on
1 min read

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 4 நாள் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி வீரர் நமன் ஓஜா 250 பந்துகளில் 219 ரன்கள் விளாசினார். இந்தியா ஏ 9 விக்கெட்டுகளை இழந்து 475 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த 4 நாள் டெஸ்ட் போட்டியில் நமன் ஓஜா தனது இரட்டைச் சதத்தில் 29 பவுண்டரிகளையும் 8 சிக்சர்களையும் விளாசியுள்ளார்.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ஏ அணி 2ஆம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட்டில் கலக்கிய உயரமான வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

நேற்று முதல் நாள் ஆட்ட முடிவில் நமன் ஓஜா 82 நாட் அவுட் என்று களத்தில் இருந்தார். இந்தியா ஏ 304/6 என்று இருந்த நிலையில் இன்று ஆட்டத்தை தொடங்கியது. முதலில் ஒரு சிக்சர் மூலம் நமன் ஓஜா சதம் கண்டார்.

ஆனால் இந்தியா ஏ தவால் குல்கர்னி மற்றும் உமேஷ் யாதவ் விக்கெட்டுகளை இழந்தது. அதாவது 8 விக்கெட்டுகள் விழுந்த போது நமன் ஓஜா 110 ரன்களுடன் ஆடி வந்தார்.

ஆனால் அதன் பிறகு அதிரடியாக ஆடத் தொடங்கினார் நமன் ஓஜா, சிக்சர்களும் பவுண்டரிகளும் வரத் தொடங்கின. அவர் 150 ரன்களைக் கடந்து இந்தியா ஏ அணியின் ஸ்கோரை 400 ரன்களாக உயர்த்தினார்.

தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசிய நமன் ஒஜா 227 பந்துகளில் இரட்டைச் சதம் கண்டார். சாத் சாயர்ஸ் என்ற வேகப்பந்து வீச்சாளரை சிக்சருக்குத் தூக்கி இரட்டைச் சதம் கண்டார் நமன் ஒஜா. கடைசியில் 250 பந்துகளில் 219 என்று அவர் ஆட்டமிழக்காமல் இருக்க கேப்டன் மனோஜ் திவாரி டிக்ளேர் செய்தார்.

கடைசி விக்கெட்டுக்காக பும்ராவுடன் இணைந்து நமன் ஓஜா 75 ரன்கள் சேர்த்தார். ஆனால் பும்ரா இதில் வெறும் 7 ரன்கள் மட்டுமே.

ஆஸ்திரேலியா ஏ அணியில் டெஸ்ட் வீரர் பிலிப் ஹியூஸ் உள்ளார் அவர் 34 ரன்களில் தவால் குல்கர்னியிடம் பவுல்டு ஆனார். தூலன், ஃபாரஸ்ட், கிறிஸ் லின் ஆகியோரை பும்ரா வீழ்த்தினார். ஜேம்ஸ் பாக்னரை உமேஷ் யாதவ் பவுல்டு செய்தார். மோய்சஸ் ஹெண்ட்ரிக்ஸ் விக்கெட்டை இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிராக்யன் ஓஜா கைப்பற்றினார்.

உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினாலும் 12 ஓவர்களில் 50 ரன்களை விட்டுக் கொடுத்தார்.நாளை ஆட்டத்தின் 3வது நாள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in