

மும்பை: எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இந்தியாவில் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி சார்பில் விளையாட உள்ள வீரர்கள் குறித்த உத்தேச பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தயார் செய்துள்ளதாக தகவல். இதில் 20 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு அடுத்து வரும் மாதங்களில் நடைபெற உள்ள பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. அதன் பேரில் வீரர்களை மதிப்பீடு செய்து உலகக் கோப்பை தொடருக்கான அணியினை பிசிசிஐ உறுதி செய்யும் என தெரிகிறது. இதில் ஐபிஎல் போன்ற உள்ளூர் கிரிக்கெட் செயல்பாடுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.
அதோடு யோ-யோ டெஸ்ட் மற்றும் டெக்ஸா ஸ்கேன் போன்ற சோதனைகளில் தேரும் வீரர்களுக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. இதெல்லாம் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிரதான வீரர்கள் காயம் காரணமாக தொடரை மிஸ் செய்ததே இதற்கு காரணம் என தெரிகிறது. இந்த முடிவு பிசிசிஐ நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி வரும் 3-ம் தேதி இலங்கை அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.