அணியின் வெற்றியால் சதம் தவறியதன் வருத்தம் நீங்கிவிடும்: முரளி விஜய்

அணியின் வெற்றியால் சதம் தவறியதன் வருத்தம் நீங்கிவிடும்: முரளி விஜய்
Updated on
2 min read

லார்ட்ஸ் மைதானத்தில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட இந்தியாவின் துவக்க வீரர் முரளி விஜய், போட்டியில் வெற்றி பெற்றால் அந்த வருத்தம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், 319 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டும் இங்கிலாந்து அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை எடுத்துள்ளது. இந்த வெற்றி இலக்கை நிர்ணயிக்க, முரளி விஜய் அடித்த 95 ரன்கள் முக்கியக் காரணமாக அமைந்தது.

இது குறித்து பேசிய முரளி விஜய், "சதத்தை தவறவிட்டதில் ஏமாற்றமே. ஆனால் இந்தப் போட்டியை வெற்றி பெற்றால் எந்த வருத்தமும் இருக்காது. ஆட்டம் இப்போது நல்ல கட்டத்தை எட்டியுள்ளது. ரவீந்திர ஜடேஜாவின் சுழல் நன்றாக எடுபடுகிறது. களத்தில் காலடித்தடங்கள் அதிகமாக இருப்பதால், சூழல் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக உள்ளது. ஐந்தாவது நாள் என்பதால் களத்தில் பல சிதைவுகள் இருக்கும்" என்றார்.

ஆட்டத்தின் கடைசி நாளான இன்று ஜடேஜாவின் பந்துவீச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பேட்டிங்கிலும் அவர் நான்காம் நாளில் சிறப்பாக ஆடி, புவனேஸ்வர் குமாருடன் 8-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து 99 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தார். அவரது அதிரடி ஆட்டம் இங்கிலாந்து அணியை நிலைகுலையச் செய்தது.

வேகமாக ரன் சேர்க்க ஜடேஜாவின் ஆட்டம் உதவியது எனக் குறிப்பிட்ட விஜய், புவனேஸ்வர் குமாரின் ஆட்டத்தையும் பாராட்டினார். அவர் ஆட்டம் இந்திய அணியை சரியான இடத்திற்கு எடுத்துச் சென்றது என்றும் அவர் கூறினார்.

முதல் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் ஏற்பட்ட மோதல், இந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆட வைத்ததா என்று கேட்டதற்கு, "ஜடேஜா களத்திற்கு வந்த போது, அவரது உத்வேகத்தைக் கண்டு அவரால் விசேஷமாக எதையோ செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன். நான் நிலைத்து ஆட முயற்சித்து ஆட்டமிழந்தேன். ஆனால் போராட்ட குணம் கொண்ட ஜடேஜா தனது நோக்கத்திலிருந்து சிதறாமல் அரை சதம் கடந்தார். அப்போது அவர் கொண்டாடிய விதமே அதைக் காட்டியது" என்றார்.

ஜடேஜாவின் ஆட்டம் அதிரடியாக இருந்தாலும், அதற்கான தளத்தை அமைத்துக் கொடுத்ததில் முரளி விஜய் பெரும் பங்கு வகித்தார். 247 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகளை அடித்து, கேப்டன் தோனியுடன் இணைந்து 79 ரன்களை அவர் பார்ட்னர்ஷிப்பில் குவித்தார்.

"அவர்களின் பந்துவீச்சு ஆஃப் ஸ்டம்பை ஒட்டியே இருந்தது. களமும் அவர்களுக்கு சாதகமாக இருந்தது. அவர்களை சோர்வடைய வைக்கவே நான் நினைத்தேன். சிறப்பான பந்து வரும்போது என்னால் எதுவும் செய்ய இயலாது அதனால் அதிக கவனம் செலுத்தி ஆடினேன். ஆட்டத்தின் முதல் மணிநேரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அதுவும் இந்தப் போட்டியில், பந்தின் சுழல் அதிகமாக இருந்ததால் மிகவும் கடினமாக இருந்தது. எனக்குப் பிறகு வரும் வீரர்கள் அதிரடியாக ஆடக் கூடியவர்கள் என்பதால், இரண்டாவது புதிய பந்தை தேர்ந்தெடுக்கும் வரை ஆடவேண்டும் என்றே நினைத்தேன்.

எனக்கான வாய்ப்புக்கு நான் காத்திருந்தேன். கடினமாக உழைத்துள்ளேன். திருப்புமுனை அமையும் என்று நம்பினேன் அது இப்போது கிடைத்துள்ளது. கிடைத்த வாய்ப்பை பிடித்துக் கொண்டுள்ளேன். சர்வதேச கிரிக்கெட்டில் நமது இயற்கையான ஆட்டத்தையே வெளிப்படுத்த வேண்டும். ஏனேன்றால் போட்டி எதிர்பார்க்காத வகையிலேயே இருக்கும்" என முரளி விஜய் கூறியுள்ளார்.

2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்நிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெறவில்லை என்பதால், இந்தப் போட்டியில் வெற்றி பெறுமா எனக் கேட்டதற்கு, "நாங்கள் அனைவரும் விசேஷமாக எதையாவது செய்ய வேண்டும் என்ற உற்சாகத்தில் உள்ளோம். எங்களை நிரூபிக்க வேண்டிய கட்டத்திலும், ஆட்டத்தை வெல்ல வேண்டிய கட்டத்திலும் உள்ளோம்" என விஜய் பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in