

லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தும் விவகாரத்திற்கு பின்னடைவு ஏற்படுத்த ஐசிசி-யிடமிருந்து கடிதம் பெற பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் முயற்சி செய்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அனுராக் தாக்கூருக்கு நீதிமன்ற அவமதிப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒரு கட்டத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு பிசிசிஐ தலைவருக்கு எச்சரிக்கை விடுக்கும்போது, ஒருமுறை உச்ச நீதிமன்றம் வழக்கில் குற்றஞ்சாட்டி விட்டால் வேறு எந்த நீதிமன்றமும் இதில் தலையிடமுடியாது போகும் பிசிசிஐ தலைவர் சிறைக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று எச்சரிக்க நேரிட்டது.
“நாங்கள் முதல் நோக்கிலேயே அவர் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகக் கருதுகிறோம். அவர் பொய் கூறியதாக அவர் மீது குற்றஞ்சாட்ட பரிசீலித்து வருகிறோம். இது அவரை சந்தேகத்திற்குடிய நபராக்கி விடும். பிற்பாடு இத்தகைய நபர் பிசிசிஐ தலைவர் பதவியில் நீடிக்க முடியுமா?” என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம் கேட்டார்.
லோதா கமிட்டி சீர்த்திருத்த பரிந்துரைகளுக்கு இடையூறாக இருக்கும் அனுராக் தாக்கூர் பதவி விலக வேண்டும் என்று லோதா கமிட்டி கருதுகிறது என்பதே விஷயம் என்பதை நீதிபதிகள் அறுதியிட்டு கூறினர். எனவே அனுராக் தாக்கூருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப் போவதாக நீதிபதிகள் அமர்வு தெரிவிக்க, கபில் சிபல், முதலில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி அவரது பதிலைக் கோர வேண்டும் என்று வாதிட்டார்.
மேலும் கபில் சிபல் கூறும்போது, தான் பிசிசிஐ சார்பாகவே வாதிடுவதாகவும் அனுராக் தாக்கூர் சார்பாக அல்லவென்றும் தெரிவிக்க, நீதிபதிகள் அனுராக் தாக்கூர் தன் தரப்பு நியாயத்தை நிறுவ எந்த ஆவணங்களையும் சமர்பிக்கலாம் என்றனர்.
பிசிசிஐ உயர்மட்ட குழுவில் தலைமைத் தணிக்கையாளர் ஒருவர் இடம்பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின்னடைவு ஏற்படுத்துமாறு ஐசிசி சேர்மன் ஷஷாங்க் மனோகரை அணுகி அவ்வாறு சிஏஜி இடம்பெற்றால் பிசிசிஐ, ஐசிசி அங்கீகாரத்தை இழக்கும் என்று கடிதம் அனுப்புமாறு கோரியதாக பெரும் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து தான் அவ்வாறு கேட்கவில்லை என்று அனுராக் தாக்கூர் தரப்பில் கூறப்பட்டது, ஆனால் நீதிமன்ற நன்னம்பிக்கையாளரும் வழக்கறிஞருமான கோபால் சுப்பிரமணியன், ஷஷான்க் மனோகரிடம் கடிதம் கேட்டதாகவும் அவர் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதனை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், “ஷஷான்க் மனோகர் தன் கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். சிஏஜி நபர் ஒருவர் பிசிசிஐ உயர்மட்ட குழுவில் இடம்பெறுவது அரசு தலையீடாகும் என்று ஐசிசி சேர்மனாக கடிதம் கேட்டுள்ளீர்கள் என்பது அவரது கடிதத்தில் தெளிவாக உள்ளது. வெளிப்படைத்தன்மைக்கான அளவுகோலாக நாங்கள் சிஏஜி தேவை என்ற உத்தரவை பிறப்பிக்கும் நிலையில் ஐசிசி-யை நீங்கள் அணுக வேண்டிய அவசியம் ஏன் எழுந்தது?” என்று கபில் சிபலிடம் கேட்டார்.
இந்நிலையில் பிசிசிஐ தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.