Published : 28 Dec 2022 07:12 AM
Last Updated : 28 Dec 2022 07:12 AM
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அகா சல்மான் சதம் விளாசி அசத்தினார்.
கராச்சியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்தது. பாபர் அஸம் 161, அகா சல்மான் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 130.5 ஓவர்களில் 438 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
பாபர் அஸம் மேற்கொண்டு ரன்கள் ஏதும் சேர்க்காத நிலையில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். அவர், 280 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 161 ரன்கள் சேர்த்தார். தனது முதல் சதத்தை விளாசிய அகா சல்மான் 155 பந்துகளில், 17 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்த நிலையில் சவுதி பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். நவுமன் அலி 7, மொகமது வாசிம் 2, மிர் ஹம்சா 1 ரன்னில் நடையை கட்டினர்.
நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட்களை வீழ்த்தினார். அஜாஸ் படேல், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணிக்கு டாம் லேதம், டேவன் கான்வே ஜோடி அற்புதமான தொடக்கம் கொடுத்தது. கான்வே 89 பந்துகளிலும், லேதம் 86 பந்துகளிலும் அரை சதம் அடித்தனர்.
2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் நியூஸிலாந்து அணி 47 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 165 ரன்கள் எடுத்தது. டாம் லேதம் 78 ரன்களும், டேவன் கான்வே 82 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 273 ரன்கள் பின்தங்கியுள்ள நியூஸிலாந்து அணியானது இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT