Last Updated : 06 Dec, 2016 06:38 AM

 

Published : 06 Dec 2016 06:38 AM
Last Updated : 06 Dec 2016 06:38 AM

மும்பை வான்கடே மைதானம்: 3-வது நாளில் இருந்து சுழலுக்கு கைகொடுக்கும் - ஆடுகள பராமரிப்பாளர் தகவல்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோத உள்ள 4-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் மும்பை வான்கடே மைதானம் 3-வது நாளில் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அலாஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

விசாகப்பட்டினத்தில் நடை பெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து மொகாலியில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்திய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி வரும் 8-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இங்கிலாந்து அணி வீரர்கள் 3-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்தும் புத்து ணர்ச்சி பெறுவதற்காக தங்களது குடும்பத்தினருடன் துபையில் சிலநாட்கள் நேரத்தை செலவிட்டு மும்பை திரும்பி உள்ளனர்.

வான்கடே மைதானத்தில் இரு அணி வீரர்களும் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர். தொடரில் 0-2 என பின்தங்கி உள்ள இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட்டிலும், சென்னையில் 16-ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட்டிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என நெருக்கடியில் உள்ளது.

இந்நிலையில் இந்த மைதானம் 3-வது நாளில் இருந்து சுழலுக்கு சாதகமாக இருக்கும் என ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆடுகள பராமரிப்பாளர் கூறும்போது, ‘‘4-வது போட்டிக்கான ஆடுகளம் சாதாரண முறையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே பந்துகள் சுழலாது. 3-வது நாளில் இருந்து சுழற்பந்து வீச்சுக்கு உதவியாக இருக்கும்.

ஆடுகள தயாரிப்பில் சிறப்பு ஏற்பாடுகள் ஒன்றும் இல்லை. உலக டி 20 ஆட்டம், ரஞ்சி கோப்பை போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளது. சர்வதேச போட்டிக்கு தகுந்தவாறு ஆடுகளத்தை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இங்கு நடைபெற இருந்த ரஞ்சி கோப்பை ஆட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதால் ஆடுகளம் தயார் செய்ய 20 நாட்கள் எடுத்துக்கொண்டோம். எங்களது கருத்துப்படி, பந்துகள் சற்று எழும்பி வரக்கூடும்’’ என்றார்.

மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘ஆடுகளம் சிறந்ததாக இருக்கும். நல்ல கிரிக்கெட் போட்டியை எதிர்பார்க்கலாம். 60 முதல் 65 சதவீதம் வரையிலான சீசன் டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளன. ஆடுகள தயாரிப்பு குறித்து அணி நிர்வாகத்திடம் இருந்து எங்களது எந்தவித குறிப்பும் வழங்கப்படவில்லை’’ என்றார்.

வான்கடே மைதானத்தில் இந்திய அணி 24 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இந்திய அணி 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ளது. 6 ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது. இங்கிலாந்து அணி கடைசியாக இங்கு விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

வான்கடே மைதானத்தில் கடைசியாக 2013-ம் ஆண்டு இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. 200-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய சச்சின் இந்த ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு வழியனுப்பு விழா நடத்திய நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை யில் இந்திய அணி தற்போது விளையாட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x