கோலியின் டெஸ்ட் வெற்றிகள் தோனிக்கு நெருக்கடி கொடுக்கும்: கங்குலி கருத்து

கோலியின் டெஸ்ட் வெற்றிகள் தோனிக்கு நெருக்கடி கொடுக்கும்: கங்குலி கருத்து
Updated on
1 min read

ஐந்து டெஸ்ட் தொடர்களில் வெற்றி, 18 டெஸ்ட்களில் தோல்வியடையாத தொடர் சாதனை என்று விராட் கோலி தன் தலைமையில் கலக்கி வருவதால் ஒருநாள் அணி கேப்டன் தோனிக்கு கேப்டன்சி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

தனியார் இந்தித் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:

கேப்டன்சி குறித்த கேள்வி நியாயமானதே. விராட் கோலியின் வெற்றிகள் அணித்தேர்வுக்குழுவுக்கு நிச்சயம் நெருக்கடிகளைக் கொடுக்கும். 3 வடிவங்களுக்கும் கேப்டனாக கோலி இன்னும் சிலகாலம் காத்திருக்க வேண்டுமென்றே நினைக்கிறேன். ஒருநாள் போட்டிகளுக்கும் அவர் கேப்டனாகி விடுவார் ஆனால் எப்போது என்பதுதான் கேள்வி.

2019 உலகக்கோப்பை போட்டிகளுக்கு யார் கேப்டனாக சிறந்தவர் என்பதை அணித்தேர்வுக்குழு நிச்சயம் பரிசீலிப்பார்கள் என்றே தோன்றுகிறது. எனவே வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் தோனிக்கு மிக முக்கியமானது, அவருக்கு அழுத்தம் கொடுக்கும் தொடராக இருக்கும் என்று கருதுகிறேன்” என்றார்.

மொகமது அசாருதீனும் தோனிக்கு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மிக முக்கியமானது என்று கூறினார். “ஆம் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் வெற்றிகள் நிச்சயம் அவரை ஒருநாள் அணிக்கான கேப்டனாக வலுவாக்குகிறது. ஆனால் தோனியின் சாதனைகளையும் தேர்வுக்குழுவினர் கருத்தில் கொள்வார்கள் என்றே கருதுகிறேன். ஜூன் மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின் போது இது எந்த வழியில் செல்லும் என்பதை பார்ப்போம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in