

நடப்பு ரஞ்சி சீசனில் பேட்டிங்கில் அதிகம் கவனம் பெற்று வரும் விக்கெட் கீப்பர், இடது கை பேட்ஸ்மென் டெல்லியின் ரிஷப் பன்ட் என்ற அதிரடி வீரர்தான்.
மஹாராஷ்டிரா அணிக்கு எதிராக 326 பந்துகளில் 308 ரன்களை விளாசினார். இதில் 42 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் அடங்கும். பிறகு ஜார்கண்ட் அணிக்கு எதிராக புதிய இந்திய ரஞ்சி சாதனையாக 48 பந்துகளில் சதம் கண்டார்.
தற்போது ரஞ்சி டிராபியில் 6 போட்டிகளில் 874 ரன்களுடன் முதலிடம் வகிக்கிறார். சராசரி 97.
தனது பேட்டிங் குறித்து இவர் கூறுவது சேவாகை எதிரொலிக்கிறது, “வடிவம் மாறுகிறது என்பதற்காக நான் என் ஆட்டப்பாணியை மாற்றி கொள்ள மாட்டேன். அடிக்க வேண்டிய பந்தை அடிக்க வேண்டியதுதான், விட வேண்டிய பந்தை விட வேண்டியதுதான். ஒருநாள் கிரிக்கெட்டை விட ரஞ்சி டிராபி போட்டிகளில் அருகருகே பீல்டர்கள் நிறுத்தப்படுவதால் விரைவில் ரன் குவிப்பது சுலபம்.
நான் 2 ஓவர்களை மெய்டனாக்கினால் 2 சிக்சர்கள் அடித்து ஈடுகட்டி ஸ்ட்ரைக் ரேட்டை 100% ஆக வைத்துக் கொள்ள முயற்சி செய்வேன். மஹாராஷ்டிரா எதிர்மறை உத்தியைக் கடைபிடித்து எனக்கு எதிராக லெக் திசை பவுலிங் வீசினர். அதனால் ரன் குவிப்பு கொஞ்சம் மந்தமானது, ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது ஒரு ஓவரில் 15 ரன்களை எடுப்பேன்” என்கிறார்.
பன்ட் இந்த சீசனை 124 பந்து 146 ரன்கள் என்று அசாமுக்கு எதிராகத் தொடங்கினார். கர்நாடகாவுக்கு எதிராக மட்டும் 24, 9 என்று சோடை போனார்.
இந்தியாவின் எதிர்கால அதிரடி விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் என்று இதற்குள்ளேயே, 19 வயதிலேயே அவர் கவனக்குவிப்பு பெற்றுள்ளார்.
இவரைப் பற்றி பிரவீண் ஆம்ரே கூறும்போது, “டெல்லியில் (பாலம்) முதல் முதலில் பண்ட் பேட்டிங்கை பார்த்தேன். நாங்கள் உண்மையான ஆட்டச்சூழலை ஏற்படுத்தினோம் அப்போதெல்லாம் இலக்கை மிகவும் அனாயசமாக கடப்பார் ரிஷப். அவரது மட்டை சுழற்றல் அபாரம், சக்தி வாய்ந்த ஷாட்கள் கண்களுக்கு விருந்து.
அவர் அச்சமின்றி அடித்து ஆடுபவர். யார் பந்து வீசுகிறார்கள் என்பதெல்லாம் அவர் பார்ப்பதே இல்லை. மைதானத்திற்கு வெளியே மிகவும் சுலபமாக அடித்து விடுகிறார். எதிர்காலத்தில் இவருக்கு பந்து வீச நிச்சயம் பவுலர்கள் அச்சப்படவே செய்வார்கள்.” என்றார்.
டி.ஏ.சேகர் கூறும்போது, “அண்டர் 19 உலகக்கோப்பையில் ரிஷப் பேட்டிங்கைப் பார்த்தேன். இந்திய வீரர்களில் பந்தை இவர் அளவுக்கு பயங்கரமாக அடிக்கும் வீரர்களை காண்பது அரிது” என்றார்.
அநேகமாக அடுத்த ஒருநாள் தொடரில் ரிஷப் பன்ட் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியாவில் உருவாகும் இன்னொரு கில்கிறிஸ்ட் இவர் என்றே கிரிக்கெட் வட்டாரங்கள் ரிஷப் பன்ட் பற்றி கருதி வருகின்றன.