

மிர்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 314 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 87 ரன்கள் முன்னிலை பெற்றது.
மிர்பூரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது. நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி விரைவாக 3 விக்கெட்களை இழந்தது.
கே.எல்.ராகுல் 10, ஷுப்மன் கில் 20, சேதேஷ்வர் புஜாரா 24 ரன்களில் தைஜுல் இஸ்லாம் பந்தில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 24 ரன்களில் தஸ்கின் அகமது பந்தில் விக்கெட் கீப்பர் நூருல் ஹசனிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 94 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி அதிரடியாக விளையாடியது.
ரிஷப் பந்த் 11-வது அரை சதத்தையும், ஸ்ரேயஸ் ஐயர் 5-வது அரை சதத்தையும் கடந்தனர். மெஹிதி ஹசன், தைஜுல் இஸ்லாம் ஆகியோரது ஓவர்களில் தலா2 சிக்ஸர்களையும் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டு அசத்தினார் ரிஷப் பந்த். அதேவேளையில் ஷகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் ஆகியோருக்கு எதிராக சிக்ஸர் அடித்தார் ஸ்ரேயஸ் ஐயர். இந்தகூட்டணியின் தாக்குதல் ஆட்டத்தால் இந்திய அணி 61.2 ஓவரில் 227 ரன்களை கடந்து முன்னிலை பெறத் தொடங்கியது.
சதம் விளாசக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிஷப் பந்த் 104 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் எடுத்த நிலையில் மெஹிதி ஹசன்பந்தில் ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்து ரிஷப் பந்த் 182 பந்துகளில் 159 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் இந்திய அணி ஆட்டம் கண்டது.
அக்சர் படேல் 4 ரன்னில் நடையை கட்டினார். ஸ்ரேயஸ் ஐயர்105 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் ஷகிப் அல் ஹசன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.இதன் பின்னர் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 12, உமேஷ் யாதவ் 14, மொகமது சிராஜ் 7 ரன்களில் வெளியேற 86.3 ஓவர்களில் 314 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது இந்திய அணி. உனத்கட் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தனது கடைசி 6 விக்கெட்களை 61 ரன்களுக்கு கொத்தாக தாரை வார்த்தது. வங்கதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி பெரிய அளவில் முன்னிலை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு அதற்கு முட்டுக்கட்டை போட்டனர்.
87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ஓவர்களில் 7 ரன்கள் எடுத்தது. நஜ்முல் ஹோசைன் சாண்டோ 5, ஜாகீர் ஹசன் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டத்தை வங்கதேச அணி தொடர்ந்து விளையாடுகிறது.
இருமுறை தப்பித்த ஸ்ரேயஸ் ஐயர்: இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர் 19 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை மெஹிதி ஹசன் தவறவிட்டார். தொடர்ந்து ஸ்ரேயஸ் ஐயரை எளிதான முறையில் ஸ்டெம்பிங் செய்ய கிடைத்த வாய்ப்பை விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் தவறவிட்டார்.
புஜாரா 7 ஆயிரம் ரன்…: இந்திய அணியின் பேட்ஸ்மேன் சேதேஷ்வர் புஜாரா சர்வதேச டெஸ்ட் போட்களில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார். வங்கதேச அணிக்கு எதிரான மிர்பூர் டெஸ்ட் போட்டியில் அவர், 16 ரன்களை எடுத்திருந்த போது இந்த மைல்கல்லை எட்டினார். தனது 98-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் புஜாரா 19 சதங்கள், 34 அரை சதங்களுடன் 7,008 ரன்கள் சேர்த்துள்ளார்.