

கொச்சி: எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கான மின் ஏலம் கொச்சி நகரில் நடைபெற்று வருகிறது. இதுவரை 37 வீரர்கள் 139.9 கோடி ரூபாய்க்கும் வாங்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை அணி 5 வீரர்களை வாங்கியுள்ளது. பென் ஸ்டோக்ஸ், ரஹானே, கைல் ஜேமிசன், நிஷாந்த் சிந்து, ஷேக் ரஷீத் ஆகிய வீரர்களை சென்னை அணி தற்போது நடைபெற்று வரும் ஏலத்தில் வாங்கியுள்ளது.
இதில் ஜேமிசனை 1 கோடி ரூபாய்க்கு வாங்கி அசத்தியுள்ளது சென்னை அணி. கடந்த 2021 பிப்ரவரி வாக்கில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரை 15 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு, அந்த முறை ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் அவர் இரண்டாம் இடம் பிடித்தார்.
27 வயதான அவர் 6 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர். பவுன்சர்கள் மூலம் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் கலையில் கைதேர்ந்த பவுலர். அவரது வருகை சென்னை அணிக்கு பலமாக அமையலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் கில்லி. நியூஸிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 9 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். கடந்த 2021 சீசனில் மட்டுமே அவர் விளையாடி உள்ளார். வரும் சீசனில் அவர் சென்னை அணிக்காக சிறப்பாக செயல்படுவார் என நம்புவோம்.