

கொச்சி: எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதன் மூலம் அவர் ஐபிஎல் களத்தில் மீண்டும் தோனியுடன் இணைந்து விளையாட உள்ளார். இதற்கு முன்னர் புனே அணியில் தோனியோடு அவர் விளையாடி இருந்தார்.
கொச்சி நகரில் நடைபெற்று வரும் இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வேகப்பந்து வீச்சு வெளிநாட்டு ஆல் ரவுண்டரை வாங்க வேண்டிய அவசியம் இருந்தது. ஏனெனில் சென்னை அணியில் இப்போது பிராவோ இல்லை. அதனைக் கருத்தில் கொண்டு சாம் கரனை வாங்க முயன்று பார்த்தது. ஆனால், அவருக்கான விலை அதிகரித்துக் கொண்டே சென்றதால் அதை ஒரு கட்டத்தில் தவிர்த்து விட்டது. பின்னர் பென் ஸ்டோக்ஸ் பெயர் அறிவிக்கப்பட்டது. அப்போது கோதாவில் இறங்கி அவரை வாங்கியது சென்னை அணி நிர்வாகம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி பாணியில் இங்கிலாந்து அணியை வழிநடத்தி வரும் ஆல் ரவுண்டர். நெருக்கடியான போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர். அதற்கு உதாரணமாக 2019 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை சொல்லலாம். இரண்டிலும் டாப் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். சிறந்த ஸ்ட்ரைக் ரேட் மற்றும் பவுலிங் எக்கானமி கொண்டுள்ளார்.
மொத்தம் 43 ஐபிஎல் போட்டிகளில் அவர் இதுவரை விளையாடி உள்ளார். அதன் மூலம் 920 ரன்களும், 28 விக்கெட்டுகளும், 21 கேட்சுகளும் பிடித்துள்ளார். சென்னை அணிக்கு அவரது வருகை நிச்சயம் பலம் சேர்க்கும் என சொல்லப்படுகிறது. சென்னை ரசிகர்களும் விசில் போட்டு அவரை வரவேற்று வருகின்றனர். இவர் கேப்டன்சி திறனும் கொண்டவர் என்பதை சென்னை அணி கருத்தில் கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது.