

கோவை: கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் தமிழகம் மற்றும் ஆந்திரா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
முதல் இன்னிங்ஸில் ஆந்திரா அணி 297 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து ஆடிய தமிழகம் அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 77 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்திருந்தது. வாஷிங்டன் சுந்தர் 7 ரன்களும், விஜய் சங்கர் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
அணியின் ஸ்கோர் 288 ரன்களாக இருந்தபோது 13 ரன்கள் எடுத்த நிலையில் சுந்தர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரதோஷ் ரஞ்சன் பால், விஜய் சங்கருடன் ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 313 ஆக இருந்தபோது 26 ரன்கள் எடுத்த நிலையில் விஜய் சங்கர் ஆட்டமிழந்தார். பின்னர் ரஞ்சன் பால் 19 ரன்களுக்கும், சாய் கிஷோர் 21 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அஜித்ராம், விக்னேஷ் ஆகியோர் ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்தனர். வாரியர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 112.1 ஓவர்களில் 345 ரன்கள் குவித்தது.
பின்னர், ஆந்திரா அணி 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. கேப்டன் ஹனுமா விஹாரி, அபிஷேக் ரெட்டி களமிறங்கினர். அபிஷேக் ரெட்டி 10 ரன், விஹாரி 26 ரன், ரஷீது 21 ரன், கரன் ஷீண்டி 13 ரன், கிரிநாத் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய ரிக்கி புவி 62 ரன்களுடன் களத்தில் உள்ளார். 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆந்திரா அணி 53 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இறுதிநாள் ஆட்டம் நடக்கிறது.