

இறுதிப் போட்டியில் கேரளா
ஐஎஸ்எல் தொடரின் இறுதிப் போட்டிக்கு கேரளா பிளாஸ்டர்ஸ் அணி முன்னேறியது. நேற்று முன்தினம் தனது 2-வது கட்ட அரை இறுதியில் டெல்லியை எதிர்த்து கேரளா விளையாடியது. சராசரி கோல்கள் விகிதப்படி இரு அணிகளும் 2-2 என சமநிலை வகித்ததால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது. இதில் கோல்கள் அடிக்கப்படாதால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடை பிடிக்கப்பட்டது. இதில் கேரளா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வரும் 18-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் கேரளா-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆஸ்திரேலியா 288/3
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் பகலிரவு டெஸ்ட் நேற்று பிரிஸ்பனில் தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 288 ரன்கள் சேர்த்தது. மேட் ரென்ஷா 71, டேவிட் வார்னர் 32, கவாஜா 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 110, ஹென்ட்ஸ்கோம்ப் 64 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
அரை இறுதியில் இந்தியா
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறியது. லக்னோவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியா கால் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் 57-வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங்கும், 66-வது நிமிடத்தில் ஹர்மான்பிரித் சிங்கும் தலா ஒரு கோல் அடித்தனர். ஸ்பெயின் தரப்பில் 22-வது நிமிடத்தில் மார்க் சேராஹிமா ஒரு கோல் அடித்தார்.