Published : 29 Jul 2014 09:29 PM
Last Updated : 29 Jul 2014 09:29 PM

3வது டெஸ்ட்: ஃபாலோ ஆனைத் தவிர்க்க இந்தியா போராட்டம்

சவுத்தாம்ப்டனில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாளான இன்று இந்தியா ஃபாலோ ஆனைத் தவிர்க்கப் போராடி வருகிறது.

இன்று இன்னமும் 23 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 242 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் தோனி 14 ரன்களுடனும் ஜடேஜா 14 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

இங்கிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் பெல், பாலன்ஸ் சதங்கள் மற்றும் ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தினால் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 569 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது,

நேற்று முதல் இன்னிங்ஸைத் துவங்கிய இந்தியா ஷிகர் தவான் விக்கெட்டை ஆண்டர்சனிடம் சடுதியில் இழந்து ஆட்ட முடிவில் 25/1 என்று இருந்தது.

இன்று முரளி விஜய், புஜாரா ஆட்டத்தைத் தொடர்ந்தனர், புஜாரா 24 ரன்கள் எடுத்து செட்டில் ஆக வேண்டிய தருணத்தில் பிராட் ஒரு ஷாட்பிட்ச் பந்தை வீச பந்து உள்ளே வந்தது. அவர் பந்தைத் தவிர்க்க நினைத்தார் கிளவ்வில் பட்டு பட்லரிடம் கேட்ச் ஆனது. தீர்மானமில்லாமல் ஆடியதால் அவுட் ஆனார் புஜாரா.

விஜய்யும், கோலியும் இணைந்து ஸ்கோரைத் தட்டுத் தடுமாறி 88 ரன்களுக்கு உயர்த்தினர். மீண்டும் முரளி விஜய் அருமையான டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றிற்கு அடித்தளமிட்டு 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்திருந்த போது, பிராட் பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு ஆட்டமிழந்தார்.

கோலி 39 ரன்களில் தடுமாற்றம் அதிகமிருந்தது. ஓரிரு எட்ஜ்கள் பவுண்டரி ஆனது. கவர் டிரைவ் ஆடினார். ஆனால் ஒட்டுமொத்தமாக அவர் களத்தில் சவுகரியமாக ஆடமுடியவில்லை. கிறிஸ் வோக்ஸ் வீசிய பவுன்சர் ஒன்றில் பேலன்ஸ் தவறி நெடுஞ்சாண்கிடையாகக் கீழே விழுந்தார் கோலி.

ஜோர்டான் பந்து ஒன்றைத் தவறாக ஆடி எட்ஜ் செய்ய அது குக்கின் கையில் பட்டு பவுண்டரி ஆனது. இதிலும் அவுட் ஆகியிருப்பார் கோலி, ஆனால் இது நடந்து நீண்ட நேரம் அவர் நிற்கவில்லை. ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு பந்தை லெந்தில் வீசி வெளியே கொண்டு செல்ல கோலி நிக் செய்தார் 39 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார்.

ஆனால் ரஹானே உண்மையில் அதிர்ஷ்டம் உள்ளவர்தான். மொயீன் அலி பந்தில் அவர் ஒரு முறை அவுட் ஆனார். ஆனால் நடுவர் அதனை நாட் அவுட் என்று தீர்ப்பளித்தார். அதன் பிறகு அவர் கட் ஷாட், புல்ஷாட், நேரான டிரைவ், பேக்ஃபுட் பஞ்ச் என்று அபாரமாக ஆடினார். ரோகித் சர்மாவும் அவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்காக 74 ரன்களைச் சேர்த்தனர்.

ரோகித் சர்மா சவுகரியமாகவே ஆடினார். அவர் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்திருந்தபோது படு மோசமான ஷாட்டில் ஆட்டமிழந்தார். பகுதி நேர பவுலரான மொயீன் அலி வீசிய மிகச்சாதாரணமான பந்து ஒன்றை மிட் ஆஃபில் தூக்கி அடிக்க பிராடிற்கு மிக எளிதான கேட்ச் ஆனது. பொறுப்பற்ற முறையில் அவுட் ஆனார் ரோகித் சர்மா.

இன்றைய சிறந்த பேட்டிங்கைக் காண்பித்த அஜின்கியா ரஹானே 54 ரன்கள் எடுத்து ஆடிவந்தபோது மொயீன் அலி வீசிய மற்றுமொரு மோசமான பந்தில் அவுட் ஆனார். அதாவது அது ஒரு அரைப்பிட்சில் குத்திய ஷாட் பிட்ச் பந்து. அதனை எங்கு வேண்டுமானாலும் அடித்திருக்கலாம். ஆனால் என்ன நடந்தது என்றே புரியவில்லை ரஹானே அதனை நேராக ஃபீல்டர் கையில் அடித்து அவுட் ஆனார்.

மொயீன் அலியின் லாலி பாப் பந்து வீச்சிற்கு 2 முக்கிய விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது இந்தியா. தற்போது தோனியும் ஜடேஜாவும் திணறிக்கொண்டு இருக்கின்றனர். ஃபாலோ ஆனைத் தவிர்க்க இந்தியா போராடி வருகிறது. 2வது புதிய பந்து எடுக்கபப்பட்டு விட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x