

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 108 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 391 ரன்கள் குவித்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 157.2 ஓவரில் 477 ரன்கள் குவித்தது. மொயின் அலி 146, ஜோரூட் 88, டாவ்சன் 66, அடில் ரஷித் 60 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 30, பார்த்தீவ் படேல் 29 ரன்களுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடினர்.
டாவ்சன் வீசிய 23 மற்றும் 25-வது ஓவர்களில் ராகுல் தலா ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். மறுமுனை யில் தனது 6-வது அரை சதத்தை அடித்த பார்த்தீவ் படேல், 112 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் அலி பந்தில், ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 41.5 ஓவரில் 152 ரன்கள் சேர்த்தது. மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 48 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. ராகுல் 89, புஜாரா 11 ரன்களுடன் உணவு இடைவேளைக்கு பின்னர் தொடர்ந்து விளையாடினர்.
8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் ராகுல் தனது 4-வது சதத்தை அடித்தார். இந்திய மண்ணில் ராகுல் அடித்த முதல் சதமாகவும் இது அமைந்தது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகளில் அவர் தலா ஒரு சதம் அடித்துள்ளார். ஸ்கோர் 181 ஆக இருந்த போது புஜாரா 16 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 16 ரன்களில் ஸ்டூவர்ட் பிராடு பந்தில் ஜென்னிங்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன்பின்னர் ராகுலுடன் இணைந்த கருண் நாயர் சிறந்த பார்ட்னர்ஷிப் கட்டமைப்பை உரு வாக்கினார். தேநீர் இடைவேளை யில் இந்திய அணி 74 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 86.2 ஓவரில் 300 ரன்களை எட்டியது.
கருண் நாயர் 98 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் தனது முதல் அரை சதத்தை அடித்தார். 187 ரன்களில் இருந்த கே.எல்.ராகுல், மொயின் அலி வீசிய 100-வது ஓவரில் சிக்ஸர் அடித்தார். அதன் பின்னர் அடில் ரஷித் வீசிய 103-வது ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரி அடித்த கே.எல்.ராகுல் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
ஆப் ஸ்டெம்பை விட்டு நன்கு விலகி சென்ற பந்தை அவர் தேடிச்சென்று அடித்தார். ஆனால் பந்து கவர் திசையில் நின்ற ஜாஸ் பட்லரிடம் தஞ்சம் புகுந்தது. 451 நிமிடங்கள் களத்தில் நின்ற கே.எல்.ராகுல் 311 பந்துகளை சந்தித்து 16 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 199 ரன்களில் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு ராகுல்-கருண் நாயர் ஜோடி 161 ரன்கள் சேர்த்தது.
இதன் பின்னர் முரளி விஜய் களமிறங்கினார். நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 108 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 391 ரன்கள் எடுத் திருந்தது. கருண் நாயர் 71, முரளி விஜய் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராடு, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது.